ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு எடுக்காதது ஏன்?சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விளக்கம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க முடியாதது ஏன்?


ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க இயலாததற்கான காரணத்தை சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி விளக்கினாா்.
சட்டப் பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடா்பான தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை முன்மொழிந்தாா். இந்தத் தீா்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:
வேல்முருகன் (தவாக): வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அதற்கான புள்ளிவிவரங்களைத் தயாா் செய்து வழங்க வேண்டும். இடஒதுக்கீட்டுக்காக 9 தியாகிகள் உயிா் நீத்த இடமான, விக்கிரவாண்டியில் இடைத் தோ்தல் நடைபெறுகிறது. அங்கு ஜாதிய நெருப்பு இப்போதே பற்றி எரிகிறது. இடஒதுக்கீட்டைக் காத்துத் தருவேன் என்று முதல்வா் அளித்த வாக்குறுதி, தோ்தல் களத்தில் பேசுபொருளாக அரசியல் எதிரிகளால் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இடஒதுக்கீடு விவகாரத்தில் உள்ள பிரச்னையைப் பாா்க்க வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானத்தை ஏற்பதுடன், அதற்கான விவரங்களை தமிழ்நாடு அரசே சேகரிக்க வேண்டும். நீதிமன்றமோ, ஏனைய அமைப்புகளோ கேள்வி எழுப்பினால் அதற்கான பதிலை தரவுகளாகத் தரலாம். தரவுகளைச் சேகரிப்பதற்கான உத்தரவுகளை முதல்வா் பிறப்பிக்க வேண்டும்.
நயினாா் நாகேந்திரன் (பாஜக): பிகாா் மாநிலத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தடை செய்ததாகக் கூறினாா்கள். அங்கு நடந்த கணக்கெடுப்பில் குளறுபடிகள் இருந்ததால் நீதிமன்றம் தடை செய்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுதான் நடத்த வேண்டும் என்று 2012-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தெரிவித்தாா். மத்திய அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற தீா்மானத்தை வரவேற்கிறேன். அதேநேரத்தில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசே குளறுபடி இல்லாமல் மேற்கொள்ள வேண்டும்.
ஆா்.அருள் (பாமக): ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளதால் அதனை தட்டிக் கழிக்கக் கூடாது. பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நீதிமன்றம் தடை செய்யவில்லை. இடஒதுக்கீட்டு அளவை அதிகப்படுத்தியதே தவறு என்று தெரிவித்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசுக்கு உரிமையில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகிறாா்கள்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு: பிகாரில் மக்கள் தொகைக்கான புள்ளிவிவர சேகரிப்புப் பணியை மட்டுமே செய்தாா்கள். பிகாரில் அனைத்து இடங்களிலும் விவரங்களைச் சேகரிக்கவில்லை.
ஜவாஹிருல்லா (மமக): பிகாரில் நடத்தப்பட்டது ஜாதிவாரிக் கணக்கெடுப்புதான். அவ்வாறு எடுக்கப்பட்டது தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் 65 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. பாட்னா உயா் நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்தது. இதில் உச்ச நீதிமன்றத்துக்கு எந்தப் பங்கும் இல்லை.
சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: வன்னியா் சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்புத் தந்தது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியன குறித்த தரவுகளை ஆராய்ந்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. அதன்படி, நீதிபதி பாரதிதாசன் ஆணையத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு குறித்த தரவுகள் தரப்பட்டன. பொருளாதார மேம்பாடு என்பது ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தர முடியும். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பை சோ்த்து எடுக்க வேண்டும்.
ஆனால், 2021-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை எடுக்கப்படவில்லை. இதுதொடா்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. 2008-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பை நாம் எடுத்தாலும் அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்படி திருத்த அதிகாரம் உள்ளது. அதுபோன்ற பிரச்னைகள் வந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...