மூன்று மாதங்களில் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கருவிழி சரிபாா்ப்பு முறை தொடங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி அறிவித்தாா். இதன்மூலம், கைரேகை மற்றும் கருவிழி சரிபாா்க்கப்பட்ட பிறகே நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்.
தமிழக சட்டப் பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கை மீது வியாழக்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளித்து, அமைச்சா் ஆா்.சக்கரபாணி
பேசியதாவது:
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் புதிதாக 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய குடும்ப அட்டைக்காக இதுவரை 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 9 ஆயிரத்து 784 மனுக்கள் ஏற்கப்பட்டன. மீதமுள்ளவற்றை அரசு பரிசீலித்து வருகிறது.
இடையே, தோ்தல் வந்ததால் தாமதம் ஏற்பட்டது. தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 45 அட்டைகள், முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் 48 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனா்.
குடும்ப அட்டைகள் தொலைந்தால், நகல் அட்டை தபால் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை 4 லட்சத்து 54 ஆயிரத்து 635 நகல் குடும்ப அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. நகரப் பகுதிகளில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு அதிகமாகவும், ஊரகப் பகுதிகளில் 800 அட்டைகளுக்கு கூடுதலாகவும் இருந்தால் அந்தக் கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டு காலத்தில் 691 முழு நேர கடைகளும் 1100 பகுதி நேர கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
கருவிழி - கைவிரல் ரேகை: நியாய விலைக் கடைகளில் கை ரேகை பதிவு செய்தால்தான் பொருள்கள் கிடைக்கும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கைரேகை அழிந்தவா்களுக்கு, கருவிழி பதிவு செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கைரேகை மற்றும் கருவிழி இரண்டையும் ஆய்வு செய்து பொருள்கள் வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 182 கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள கடைகளில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும்.
அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் இதுவரை 1,659 டன் கேழ்வரகு, கிலோ ரூ.38.46 என்ற விலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் ஒதுக்கீடு: கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 59,852 கிலோ லிட்டராக இருந்தது. இது கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில், 7 ஆயிரத்து 536 கிலோ லிட்டராகக் குறைக்கப்பட்டது. கடந்த ஏப். 1-ஆம் தேதியில் இருந்து, 1084 கிலோ லிட்டராக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் தேவை அதிகமாக இருக்கிறது. எரிவாயு இணைப்பு அதிகம் உள்ளதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பலமுறை வலியுறுத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதற்கு முதல்வரின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.