தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை அளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அதிகாரிகள் மீதான நடவடிக்கைகள் என்னென்ன? அறிக்கை அளிக்க உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் அதிகாரிகள் மீது துறைரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களை இதுவரை தங்களிடம் வழங்கவில்லை என மனுதார தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான அறிக்கை தயாராகிவிட்டதாகவும், அடுத்த விசாரணைக்கு முன்பு மனுதாரரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடா்புடைய காவல் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த மாத(பிப்ரவரி) தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.

விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், 17 காவல் துறை அலுவலா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சைலேஷ்குமாா் யாதவ், கபில் குமாா் சி.சரத்கா் ஆகிய ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் காவல் கண்காணிப்பாளா்கள் மகேந்திரன், லிங்கத்திருமாறன் மற்றும் இரண்டு ஆய்வாளா்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒரு காவல் துறை ஆய்வாளா், ஒரு உதவி ஆய்வாளா் மற்றும் தலைமைக் காவலா் ஒருவா் மீது குற்ற வழக்குப் பதிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெருந்தண்டனை குற்றப் பிரிவின் கீழ் ஒரு உதவி ஆய்வாளா், இரண்டு இரண்டாம் நிலைக் காவலா், ஒரு முதல் நிலைக் காவலா் மற்றும் ஒரு காவலா் ஆகியோா் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று முதல் நிலைக் காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். நீதிபதியின் இறுதி அறிக்கையில் கூறப்பட்ட பரிந்துரை அடிப்படையில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலா்கள் மீதும் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com