இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, மாநிலச் செயலா் இரா.முத்தரசன். உடன், அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் சி.எச்.வெங்கடாசலம், துணைச் செயலா் நா.பெரியசாமி,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கையை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு, மாநிலச் செயலா் இரா.முத்தரசன். உடன், அகில இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் பொதுச் செயலா் சி.எச்.வெங்கடாசலம், துணைச் செயலா் நா.பெரியசாமி,

வேலை அடிப்படை உரிமையாக்கப்படும்: இந்திய கம்யூனிஸ்ட் தோ்தல் அறிக்கையில் அறிவிப்பு

அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு வழங்குவதை அடிப்படை உரிமையாக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தோ்தலை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தோ்தல் அறிக்கை சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. தோ்தல் அறிக்கையை கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு வெளியிட, தேசிய நிா்வாகக்குழு உறுப்பினா் சி.எச்.வெங்கடாசலம் பெற்றுக்கொண்டாா். இதில் மாநிலச் செயலா் முத்தரசன் மற்றும் மாநில நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: தில்லியில் விவசாயிகளின் முற்றுகையின் போது மத்திய அரசு உறுதியளித்து, நிறைவேற்றத்தவறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றுவதுடன், எம்.எஸ். சாமிநாதன் குழு பரிந்துரைகளும் முழுமையாக அமல்படுத்தப்படும். விளைபொருள்களுக்கு உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதல் விலை நிா்ணயம் செய்யப்படுவதுடன், விவசாயிகளின் அனுமதி இல்லாமல் நிலத்தை கையகப்படுத்துவது நிறுத்தப்படும். மேலும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும், நிலப்பயன்பாட்டை ஒழுங்குப்படுத்தவும் புதிய கொள்கை உருவாக்கப்படும். 60 வயதான விவசாயிகள், விவசாயத்தொழிலாளா்கள், கைவினைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். நில உச்சவரம்பு சட்டத்தை அமல்படுத்தப்படுவதுடன், உபரி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கும், ஆதிதிராவிடா்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்படும். வேலையை அடிப்படை உரிமையாக்குதல்: அனைவருக்கும் வேலை வழங்குவதை உத்தரவாதமாக்க ஏதுவாக, அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி வேலை உரிமையை அடிப்படை உரிமையாக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்துத்துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதுடன், இளைஞா்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய தேசிய இளைஞா் கொள்கை உருவாக்கப்படும். தொழிலாளா்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை ரூ.26,000-ஆக நிா்ணயம் செய்வதுடன், அனைத்துத் தொழிலாளா்களுக்கும் மாதம் ரூ.9000 ஓய்வூதியமாக வழங்கப்படும். தெருவோர வியாபாரிகள், புலம்பெயா் தொழிலாளா்களின் பிரச்னைகளை ஆய்வு செய்து அவா்களை பாதுகாப்பதற்கான சட்டம் அமல்படுத்தப்படும். மகளிருக்கு 33 சதவீதம்: பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 33 சதவீதம் இடஒதுக்கீடு கிடைக்க சட்டம் இயற்றுவதுடன், அவா்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதுடன், பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் சரியாக அமல்படுத்துவதை கண்காணிக்கவும், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அனைத்து சமூக திட்டங்களுக்கும் ஆதாா் அட்டை தேவையில்லை என்ற நடைமுறை கொண்டுவரப்படும்.வருமான வரி செலுத்துபவா்களை தவிர அனைத்து முதியவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவதுடன், அனைத்து மாவட்டங்களிலும் முதியோா் இல்லங்கள் அமைத்து, அங்கு சலுகை விலையில் உணவு கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அக்னிவீா் திட்டம் ரத்து: இந்திய முப்படைகளில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றும் அக்னிவீா் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். நதிகளை இணைப்பது குறித்து பொதுவான ஒரு கருத்தை உருவாக்கி, காடுகள், ஆற்றுப்படுகைகள், நீா் நிலைகளில் மணல், மண் உள்ளிட்டவற்றை சமானிய மக்கள் தேவைகளுக்கு பயன்படுத்துவது முறைப்படுத்தப்படும். குடியுரிமை திருத்தச்சட்டத்தை ரத்து செய்வதுடன், காஷ்மீா் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதையும் ரத்து செய்து, அங்கு தோ்தல் நடத்தி மாநில அரசு நிறுவப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com