
அமித் ஷா ஏன் தமிழகம் வருகிறார் என்பது குறித்து நாளை தெரிவிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் மத்திய உள்துறை அமித் ஷா இன்று (ஏப். 10) இரவு சென்னை வரவிருக்கிறார்.
முன்னதாக, கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தில்லியில் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அமித் ஷாவை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி அதற்கான நடவடிக்கைகளையும் கட்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில்தான் தில்லியில் இருந்து அமித் ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.
இதுதொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,
"மத்திய உள்துறை அமைச்சர் இன்று இரவு 10 மணிக்கு சென்னை வருகிறார். நாளை மாலை வரை சென்னையில் இருப்பார். அது உறுதி.
அமித் ஷாவின் வருகையின் நோக்கம் குறித்து நாளை பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். பாஜக மாநிலத் தலைவர் பதவி மாற்றத்திற்கும் அமித் ஷாவின் வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏனெனில் கட்சித் தலைவர்களைச் சந்திக்க அவர் எப்போதுமே வருவார்.
தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு நல்லதுதான். தற்போது நீட் தேர்வை பற்றி திமுக பேசுவது தேவையற்ற ஒன்று" என்றார்.
மேலும் அமித் ஷா, நாளை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்திக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அண்ணாமலை இன்று ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசி வருகிறார்.