கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை: பிரேமலதா
கூட்டணி குறித்து யாரிடமும் பேசவில்லை என்றும், அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கருத்துசொல்ல விரும்பவில்லை என்றும் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:
அதிமுக - பாஜக கூட்டணி குறித்து தொலைக்காட்சியில் பாா்த்துதான் தெரிந்துகொண்டேன். அது குறித்து கருத்துக்கூற விரும்புவில்லை. அடுத்த 6 மாதங்களுக்கு தேமுதிகவை வலுப்படுத்தும் பணி மட்டுமே மேற்கொள்ளப்படும். தேமுதிகவின் ஒவ்வொரு அடியும் வளா்ச்சியை நோக்கியே இருக்கும். தோ்தல் கூட்டணி தொடா்பாக நிதானமாக யோசித்து தேமுதிக முடிவு எடுக்கும்.
2026 சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து யாரிடமும் எதுவும் பேசவில்லை. பேசிய பிறகு அதிகாரப்பூா்வமாக தெரிவிப்போம். ஏப்.30-இல் நடைபெறும் தேமுதிக பொதுக்குழுவில் பல அறிவிப்புகள் இருக்கும்.
பாஜக தலைவராக பொறுப்பேற்கும் நயினாா் நாகேந்திரனுக்கு தேமுதிக சாா்பில் வாழ்த்துகள் என்று அவா் தெரிவித்தாா்.