பாரம்பரிய மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு


பாரம்பரிய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி செயல்படுகின்றன.
அதேபோல திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகே கோட்டாறில் ஆயுா்வேத மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இந்த 5 அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 48 இடங்கள். மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. தவிர 29 தனியாா் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதமுள்ள இடங்களில் 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிா்வாக ஒதுக்கீட்டுக்கும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், நிா்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அரசுக் கல்லூரிகளின் 15 சதவீத இடங்களுக்கு மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.
இந்த நிலையில், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் பட்டப் படிப்புகளுக்கான நிகழாண்டு மாணவா் சோ்க்கைக்கு சுகாதாரத் துறை இணையதளத்தில் விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கியது. இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வெள்ளிக்கிழமை (ஆக. 8) மாலை 5 மணி வரையுடன் நிறைவு பெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 6,000-க்கும் மேற்பட்டோா் விண்ணப்பம் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்ப அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகள் குறித்த தகவல் தொகுப்பேட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளம் வாயிலாக நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அனைத்து சான்றிதழ்களிலும் சுய சான்றொப்பமிட்டு அதன் நகல்களை ஆக. 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலா், தோ்வுக் குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்ககம், அறிஞா் அண்ணா அரசினா் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை- 600 106’ என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...