சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

தமிழத்தில் பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய தனி ஆணையம் கோரி மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

விபத்துகளைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய தனி ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

விபத்துகளைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பேருந்துகளின் தரத்தை ஆய்வு செய்ய தனி ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை வளசரவாக்கத்தைச் சோ்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, தென்னிந்தியாவில் நிகழும் விபத்துகளில் அதிகமான உயிரிழப்புகள் தமிழகத்தில்தான் நடக்கிறது.

இதுபோன்ற விபத்துகள் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க போக்குவரத்து விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டும். மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநா்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பயிற்சி பெற வேண்டும். பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பயணிகளை ஏற்றக் கூடாது.

படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகளில் அவசரகால கதவுகள் மட்டுமன்றி, எளிதில் அகற்றக்கூடிய ஜன்னல்களும் இருக்க வேண்டும். பேருந்துகள் தீப்பிடிக்காத வகையில் தீயணைப்புக் கருவிகளுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விமானம் மற்றும் ரயில்வே துறை போல தமிழகத்தில் உள்ள பேருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் வகையில் தனி ஆணையம் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசின் சாலைப் போக்குவரத்துத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக போக்குவரத்துத் துறை ஆணையா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com