கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள்!

கடலூர் மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 10 அறிவிப்புகள் தொடர்பாக...
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.DIPR
Updated on
2 min read

கடலூர் மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (21.2.2025) கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில்,  புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை  வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கடலூர் மாவட்டத்துக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்த விழாவின் மூலமாக பத்து அறிவிப்புகளை நான் இங்கே அறிவிக்க விரும்புகிறேன். 

  • முதல் அறிவிப்பு - திட்டக்குடி மற்றும் விருத்தாச்சலம் பகுதிகளில் இருக்கின்ற வேளாண் பெருமக்கள் பயன் பெறும் வகையில், 130 கோடி ரூபாய் செலவில் வெலிங்டன் ஏரியில், கரைகளை பலப்படுத்துவது, வாய்க்காலை புனரமைப்பது போன்ற மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். 

  • இரண்டாவது அறிவிப்பு - கடலூர் மாநகராட்சியில் இருக்கின்ற மஞ்சக்குப்பம் மைதானம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படும். 

  • மூன்றாவது அறிவிப்பு - நம்முடைய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் – சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சட்டமன்றத்தில் தொடர்ந்து கோரிக்கையை  எழுப்பினார். எங்களுக்குக்கூட சில நேரம் கோபம் வந்தது. ஆனால் அந்த கோபம் இருக்கக்கூடிய இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வார்கள். எனவே, அந்த உணர்வோடு நான் இங்கே மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். பண்ருட்டி தொகுதியில்,  நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனின் கோரிக்கையை ஏற்று, 15 கோடி ரூபாய் செலவில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். 

  • நான்காவது அறிவிப்பு - புவனகிரி மற்றும் சிதம்பரம் பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், முட்லூரில் இருந்து சேத்தியாத்தோப்பு வரை இருக்கும் இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

  • ஐந்தாவது அறிவிப்பு - நெய்வேலி பகுதியில், கெடிலம் ஆற்றங்கரையில், செம்மேடு, சிறுவத்தூர், எலந்தம்பட்டு கிராமங்களில் 36 கோடி ரூபாய் செலவில் வெள்ளத்தடுப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

  • ஆறாவது அறிவிப்பு - திருவந்திபுரம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்பெறும் வகையில், எம்.புதூர் முதல் திருவந்திபுரம் வரை உள்ள சாலை, 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். 

  • ஏழாவது அறிவிப்பு - குறிஞ்சிப்பாடியில் புதிய வட்டாட்சியர் அலுவலக கட்டடம் 6 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

  • எட்டாவது அறிவிப்பு – காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் மற்றும் புவனகிரி பகுதிகளுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி மேம்படுத்தப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, 63 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். 

  • ஒன்பதாவது அறிவிப்பு - கடலூர் வட்டத்தில், பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளை குறைக்க, தென்பெண்ணை ஆற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளத்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

  • பத்தாவது அறிவிப்பு – இன்றைக்கு உலகத் தாய்மொழிகள் நாள்! நம்முடைய தாய்மொழியான தமிழைக் காக்க தன்னுயிரை ஈந்த மாணவர் ராசேந்திரனின் நினைவிடம் புதுப்பிக்கப்படும்! ” என்றார்.

    இதையும் படிக்க: கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com