கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

கடலூர் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக..
கடலூர் மாவட்டத்தில் ரூ.1476.22 கோடியில் திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்!
Updated on
2 min read

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (21.2.2025) கடலூருக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வழிநெடுகிலும் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் பொதுமக்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடலூர், மஞ்சக்குப்பம் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் 704 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் 602 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 384 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 386 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 44,689 பயனாளிகளுக்கு வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய விவரங்கள் 

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் குமனன்குளம், சான்றோர்பாளையம், வழிசோதனைபாளையம், சாத்தான்குப்பம், கொட்டிகோனங்குப்பம் உள்ளிட்ட இடங்களில் 188 கி.மீ நீள 119 சாலைப் பணிகள், தம்பிப்பேட்டை காலனி, கிளிஞ்சிக்குப்பம் ஆகிய இடங்களில் 2 பாலங்கள், புதுக்கடை (இருளர் காலனி), காடாம்புலியூர் (தொல்குடி குடியிருப்பு), முத்தையாள்பேட்டை, தாண்டவராயசோழகன்பேட்டை, ஓமாபுலியூர், குமராக்குடி, தீத்தாம்பட்டு, மேலூர், ராமநத்தம், சிறுப்பாக்கம் ஆகிய இடங்களில் 10 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள்; கோத்தேரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் மதி அங்காடி,  என 120 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 133 பணிகள்;

பள்ளிக்கல்வித் துறை சார்பில், பண்ருட்டி, மாளிகைமேடு, சிதம்பரம், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, வேப்பூர், பு.முட்லூர் மற்றும் திருத்துறையூர் ஆகிய பள்ளிகளில் 55 வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வுக்கூடம், குடிநீர் இணைப்பு, கடலூர், அண்ணாகிராமம், நல்லூர், ஸ்ரீமுஷ்ணம், குமராட்சி, கீரப்பாளையம் மற்றும் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியங்களில் 20 தொடக்கப் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் என 21 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28 பணிகள்;

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 3 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவியர் விடுதிக் கட்டடம்;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், வேப்பூர் வட்டார தலைமை மருத்துவமனை கூடுதல் கட்டடம், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் கடலூர், அண்ணாகிராமம், குமராட்சி வட்டார பொது சுகாதார மையங்கள், மேல்புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் துணை சுகாதார நிலையங்கள், பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், என 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 பணிகள்;

இதையும் படிக்க: இரவில் பெண்ணுக்கு மோசமான குறுந்தகவல் அனுப்புவது குற்றம்: நீதிமன்றம்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கடலூர் மாநகராட்சியில், 173 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 9-வது வார்டில் பகுதியாகவும், 27 மற்றும் 48-வது வார்டுகளில் முழுமையாகவும் என 27 மாநகர் பகுதிகளில் 148.7 கி.மீ நீளத்திற்கு பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் 26 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருதாடு, தென்பெண்னையாற்றில் கிணறு அமைத்து 5,409 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம்; 

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் 7 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் நிழற்குடை, வணிக வளாகம்; 

பேரூராட்சித்துறை சார்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம்
5 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஸ்ரீமுஷ்ணத்தில் கசடு கழிவுநீர் மேலாண்மைத் திட்டம், பெண்ணாடம் மற்றும் மங்கலம்பேட்டையில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள்;

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சி.என். பாளையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 16 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பண்ருட்டி பலா மதிப்புகூட்டு மையம்; 

என மொத்தம், 384 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com