பிரமாண்டமாகத் தயாராகி வரும் விஜயகாந்த் வீடு! கிரகப்பிரவேசம் பற்றி வெளியான தகவல்!!

பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள விஜயகாந்த் வீடு பற்றிய தகவல்கள்
தேமுதிக தலைவா் விஜயகாந்த்
தேமுதிக தலைவா் விஜயகாந்த்
Published on
Updated on
1 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் மறைந்த நிலையில், அவர் ஆசை ஆசையாகக் காட்டுப்பாக்கம் பகுதியில் கட்டி வந்த அரண்மனை போன்ற வீடு வேகமாகத் தயாராகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம் கடந்த வாரம் தொண்டர்கள் மற்றும் அவரது ரசிகர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. கோயம்பேடு கட்சி அலுவலகமே கடந்த சனிக்கிழமை அவரது தொண்டர்களால் திக்குமுக்காடிப்போனது.

மறைந்த விஜயகாந்த், சாலிகிராமத்தில் உள்ள ஒரு சாதாரண வீட்டில்தான் கடைசி வரை வாழ்ந்துமறைந்தார். ஆனால் போரூர் அருகே காட்டுப்பாக்கம் ஆட்கோ நகரில் அரண்மனை போல ஒரு வீடு கட்டி வந்தார். கிட்டத்தட்ட இந்த வீடு கட்டும் பணி 2013ஆம் ஆண்டு தொடங்கியது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. விஜயகாந்த் மறைந்தபோது, இந்த வீடு கிட்டத்தட்ட பாதிதான் நிறைவடைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு ஆண்டில் வீடு விறுவிறுப்பாகக் கட்டப்பட்டு நிறைவுப் பணிகளுக்காகக் காத்திருக்கிறது. 20 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீடு, ஒரு அரசியல்வாதியைப் பார்க்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து நிற்க வசதியாக அனைத்து வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வீடு, விஜயகாந்த் குடும்பத்துக்காக மட்டுமல்லாமல், அவரை சந்திக்க வரும் தொண்டர்களுக்காகவும் கட்டப்பட்டிருப்பது போலத்தான் இருக்கிறது. கீழே ஒரு திருமண மண்டபம் போல விரிந்து பரந்த வரவேற்பு அறையைப் பார்க்கும் எவருக்கும், விஜயகாந்த் தனது அடுத்தக்கட்ட அரசியல் வாழ்வின் நகர்வை முன்கூட்டியே கணித்துத்தான் இப்படிப்பட்ட ஒரு வீட்டை கட்டத் தொடங்கியிருக்கலாம் என்றே பார்ப்பவர்கள் கண் கலங்குகிறார்கள். இந்த வீட்டின் பால்கனியிலிருந்து தொண்டர்களைப் பார்த்து விஜயகாந்த் கையசைக்க முடியாமல் போனதே என்றுதான் பலரும் வருந்துகிறார்கள்.

இந்த வீடு கட்டப்பட்டு வரும் பகுதியைச் சேர்ந்தவர்களும் இதே வருத்தத்தைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள். விரைவில் தங்கள் ஊருக்கு விஜயகாந்த் வருவார் என்று நினைத்திருந்ததாகவும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீடு கட்டும் பணி தொடங்கியும் கூட, அவரது உடல்நிலை காரணமாக வீடு கட்டும் பணி சில ஆண்டுகள் முடியாமல் நின்றுவிட்டதால்தான் இத்தனை காலம் ஆகிவிட்டதாகவும் கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், கிட்டத்தட்ட வீடு கட்டும் பணி நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும் 2025ஆம் ஆண்டு புதுமனைப் புகுவிழா நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com