
நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து தில்லியில் உள்ள இலங்கை தூதரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த கு.ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேல் (39), தினேஷ் (30), கார்த்திகேசன் (27), செந்தமிழ் (27), பட்டினச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மைவிழிநாதன் (27), வெற்றிவேல் (28), மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடியைச் சேர்ந்த நவெந்து (34), வானகிரியைச் சேர்ந்த ராஜேந்திரன் (36), ராம்கி (30), நாகை மாவட்டம், நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார் (26), நந்தகுமார் (30), பாபு (31), குமரன் (28) ஆகிய 13 பேர் கடந்த 26-ஆம் தேதி இரவு காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் கடலுக்குச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே திங்கள்கிழமை (ஜன. 27) இரவு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 13 பேரையும் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மீனவர்கள் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த இருவர் உள்பட 5 பேரும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் கிளிஞ்சல்மேடு கிராமப் பஞ்சாயத்தார்களுக்கு நள்ளிரவு தெரியவந்தது. இதையடுத்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்திலும், மீன்வளத் துறையினரிடமும் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் பருத்திதுறை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை பிப். 10-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
தூதருக்கு சம்மன்: இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை நேரில் அழைத்து வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 மீனவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
எவ்விதச் சூழலிலும் படைகள் மூலம் சாதாரண மக்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தில்லியில் உள்ள இலங்கை தூதரை செவ்வாய்க்கிழமை காலையில் நேரில் அழைத்து இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகமும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்திடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றது.
இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுக்க இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்களைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
மீனவர்கள் விவகாரத்தை மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் அணுகுவதுடன், அவர்களின் நல்வாழ்வை உறுதிசெய்ய பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது' எனத் தெரிவித்துள்ளது.
தொடரும் சம்பவங்கள்: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது.
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு 5 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும், 34 மீனவர்களை கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழக, காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.