ஜூன் 20ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்! - இபிஎஸ் அறிவிப்பு

ஜூன் 20 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் அதிமுக மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது பற்றி...
admk protest
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப் படம்
Published on
Updated on
2 min read

'மா' விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுக அரசைக் கண்டித்தும் வருகிற ஜூன் 20 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழகத்தில் நெல், கரும்பு சாகுபடிகளைத் தொடர்ந்து அதிக நிலப் பரப்பில் சாகுபடி செய்யப்படுவது 'மா' மற்றும் 'தென்னை'. சுமார் 1 லட்சத்து 14 ஆயிரம் ஹெக்டேரில் 'மா' சாகுபடி செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழத்தில், மாம்பழக் கூழ் தயாரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டதாலும், மாம்பழக் கூழ் தயாரிக்க மாம்பழங்களை கொள்முதல் செய்வதில் பெரும் பின்னடைவு இருப்பதாலும், கிருஷ்ணகிரி மாவட்ட 'மா' விவசாயிகள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிகட்ட வேண்டுமென்று விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் மனு அளித்தும், இதுவரை முறையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர்.

மாங்கூழ் தொழிற்சாலைகள் கிலோ ஒன்றுக்கு 4 முதல் 5 ரூபாய் மட்டுமே தர முன்வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 'மா' விவசாயிகள் கொள்முதல் விலையாக மாம்பழம் கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000/- ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாம்பழக் கூழுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகளைப் போக்கவும், மேலும் அவர்கள் தெரிவித்துள்ள மற்ற கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடகமாடப்படுகிறதே தவிர, இதுவரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 'மா' பயிரிட்டுள்ள விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தின் சார்பில், 20.6.2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம், கழக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி எம்எல்ஏ தலைமையிலும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி; கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், 'மா விவசாயிகள்', வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com