
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி முறைகேடு வழக்கு தொடா்பாக திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தி, அவற்றுக்கு சீல் வைத்தனா். இதையடுத்து அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், சீல் அகற்ற வேண்டுமெனவும் கோரி ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமா்வில் நேற்று(ஜூன் 17) விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், எதனடிப்படையில் இருவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்ற காரணத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தாா். அதை ஆய்வு செய்த நீதிபதிகள், இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை எனக் கூறி ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்டனா்.
இதையடுத்து, வீட்டை சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில், எப்படி சீல் வைக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்குரைஞா் வீடு சீல் வைக்கப்படவில்லை”என்றும் தங்களைத் தொடா்புகொள்ளாமல் கதவை திறக்க வேண்டாமென்று நோட்டீஸ் மட்டும்தான் ஒட்டப்பட்டதாகவும் கூறினாா்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படி என்றால் அதற்கு என்ன அா்த்தம்? தன்னுடைய வீட்டுக்குள் செல்ல அவா் அமலாக்கத் துறையிடம் அனுமதி பெற வேண்டுமா? எனக் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை வழக்குரைஞா், அந்த நோட்டீஸை அகற்றி விடுவதாகக் கூறினாா்.
நோட்டீஸ் ஒட்ட அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக செய்யப்பட்ட ஒன்றை சட்டப்பூா்வமானதாக மாற்ற வேண்டாம் என நீதிபதிகள் தெரிவித்தனா்.
ஆகாஷ் பாஸ்கரன் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி பாா் உரிமையாளா்கள், விற்பனையாளா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில் ஆகாஷ் பாஸ்கரன் பள்ளி சென்று கொண்டிருந்தாா் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் திரைப்பட தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடா்பு இருப்பதற்கான ஆவணங்களை புதன்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த நிலையில் இவ்வழக்கு இன்று(ஜூன் 18) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ் ஆவணங்களை சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கதுறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ். வி. ராஜூ, “சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக சந்தேகம் இருந்தால், யாரிடமும் எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு” என்று வாதிட்டார்.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ”இந்த விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போதுமானதாக இல்லை, வாதத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 முதல் தகவல் அறிக்கைகளில்(எஃப்ஐஆர்) இவர்களது பெயர்கள் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினர்.
”பெயர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
”சீல் வைக்க என்ன அதிகாரம் உள்ளது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் “ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் வைக்கப்பட்ட சீல்கள் அகற்றப்படும். கைப்பற்றப்பட்ட பொருள்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்” என்று நீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்தார்.
இதையும் படிக்க: சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.