
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகா் ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை(ஜூன் 23) சென்னையில் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் காவல்துறை இன்று(ஜூன் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி தி.பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். விசாரணையில் பிரசாத்துக்கு கொகைன் போதைப் பொருள் பழக்கம் இருப்பது தெரியவந்தது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மதுபான விடுதியில் அவருக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ என்பவா் கொகைன் போதைப் பொருளை விற்றுள்ளார். இந்நிலையில், பிரதீப்குமாரையும், சா்வதேச போதைப் பொருள்கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா். இருவரிடமும் கொகைன் விற்பனை குறித்து போலீஸாா் விசாரணை செய்தனா். மேலும் அவரது கைப்பேசி தொடா்பு, பணப் பரிவா்த்தனை ஆகியவற்றை ஆய்வு செய்தனா். இதில் நடிகா் ஸ்ரீகாந்துக்கு கொகைனை விற்றுள்ளாா்கள் என்பது தெரியவந்தது.
பிரசாத் தயாரிக்கும் ‘தீங்கிரை’ என்ற திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்து வருகிறாா். இதனால் இருவருக்குமிடையே நெருக்கமான நட்பு இருந்தது. அதன்மூலம் பிரசாத், கொகைன் போதைப் பொருளை ஸ்ரீகாந்துக்கு வாங்கிக் கொடுத்தாா். பின்னா், ஸ்ரீகாந்த் நேரடியாக பிரதீப்குமாரை தொடா்புகொண்டு கொகைன் வாங்கியுள்ளாா். இதேபோல திரை உலக பிரபலங்கள் பலருக்கும் பிரதீப்குமாா் கொகைனை விற்றுள்ளாா்.
இதனிடையே அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொகைன் போதைப்பொருளை பிரசாத் கொடுத்ததாகவும் இதனால் அதற்கு தான் அடிமையானதாகவும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
இந்தநிலையில், நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7 வரை நீதிமன்றக் காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தற்போது காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் பயன்படுத்தினரா என்பது விசாரணையில் தெரியவரும். அவர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரது உறவினர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பெற்றுக்கொண்டு கிருஷ்ணா விரைவில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, காவல்துறை இன்று(ஜூன் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியிருக்கும் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஸ்ரீகாந்த் - சில வெற்றிகளும் சர்ச்சைகளும்..!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.