ஸ்ரீகாந்த் - சில வெற்றிகளும் சர்ச்சைகளும்..!

நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் சிக்கியது பெரிய அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது...
actor srikanth
நடிகர் ஸ்ரீகாந்த்
Published on
Updated on
3 min read

சினிமாவில் முதல் படத்திலேயே ஒருவர் கவனிக்கப்பட வேண்டுமென்றால் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது தன் நடிப்புத் திறனையும் வசனங்களையும் ஒரு துள்ளலுடன் முன்வைத்து ரசிகர்களைக் கவர வேண்டும். இதில், இரண்டாம் பட்டியலில் இருப்பவர்கள் மிக மிகக் குறைவு. அந்தக் குறைவான நடிகர்களில் ஒருவராகத் திரைக்கு வந்தவர் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் சினிமா குடும்பப் பின்னணியில் பிறக்கவில்லை. சொல்லப்போனால், அவர் குடும்பத்தில் யாரும் திரைத்துறையில் இல்லை. கல்லூரி காலத்திலேயே நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் நாடகங்கள் மற்றும் கே. பாலச்சந்தர் இயக்கிய சின்னத்திரை தொடரான ஜன்னல் மரபு கவிதைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றியிருக்கிறார்.

2000-களின் துவக்கத்தில் சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்தவருக்கு முதலில் இயக்குநர் கதிர் இயக்கிய காதல் வைரஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், இறுதியில் ஸ்ரீகாந்துக்குப் பதில் ரிச்சர்ட் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பின், ஸ்ரீகாந்துக்கு இயக்குநர் ஜீவா மூலம் 12-பி படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தாலும் சில காரணங்களால் அப்படத்திலிருந்தும் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாகத்தான் நடிகர் ஷாம் அறிமுகமானார்.

ஸ்ரீகாந்த் மீண்டும் வாய்ப்புகளைத் தேடி அலைந்தார். நல்ல முகத்தோற்றம், காதலையும் காத்திருத்தலையும் மென்மையாக முன்வைக்கும் முகபாவனைகள் என எல்லாம் சரியாகப் பொருந்திய நடிகராக இருந்தவருக்கு இயக்குநர் சசி மூலம் திருப்புமுனை அமைகிறது.

அப்படித்தான் ஸ்ரீகாந்த் 2002 ஆம் ஆண்டு ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் நாயகனாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். முதல் படம் பலருக்கும் சின்ன வெற்றியையும் கவனத்தையும் கொடுக்கும். ஆனால், இப்படம் ஸ்ரீகாந்துக்கு பெரிய வெளிச்சத்தையும் தமிழ் சினிமாவின் புதிய சாக்லேட் பாய் என்கிற பட்டத்தையும் கொடுத்தது.

அன்று, “மெட்டுகளே... மெட்டுகளே..”, “ஆப்பிள் பெண்ணே...” பாடல்களைத் தமிழகத்தில் முணுமுணுக்காத வாய்கள் குறைவு. முக்கியமாக, ஆப்பிள் பெண்ணே பாடலில் நாயகி பூமிகா அமைதியாக உணர்ச்சிகளைக் கடத்த தன் காதலை ஸ்ரீகாந்த் பாவனைகளுடன் முன்வைக்கும் அனைத்துக் காட்சிகளும் அவருக்கான ரசிகைகள் படையையே உருவாக்கிக் கொடுத்தது.

முதல் படம் நல்ல ஹிட் என்பதால் அடுத்தடுத்து ஸ்ரீகாந்துக்கு வாய்ப்புகள் வரத் துவங்கின. மனசெல்லாம், பார்த்திபன் கனவு என தொடர்ந்து சில வெற்றிப்படங்கள் அமைய, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இரண்டாம் தர நடிகர்கள் பட்டியலுக்குள் நுழைந்தார்.

ஸ்ரீகாந்த்தை வைத்து படம் இயக்கினால் ரசிகர்கள் வருவார்கள் என்கிற நிலை உருவானதால் பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் அவரைத் தேடிச் சென்றன. ஜூட் (2004), பம்பரக் கண்ணாலே (2005) ஆகிய படங்களும் வெற்றியைப் பெற்றதால் திரைத்துறைக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே பெரிதாகப் பேசப்பட்டார்.

எல்லா மனிதர்களும் தங்களின் மோசமான காலகட்டத்தைச் சந்திக்க வேண்டும் என்பதுபோல, ஸ்ரீகாந்த் 2007 இல், தனது காதலி வந்தனாவை ஏமாற்றியதாக சர்ச்சையில் சிக்கினார். ஸ்ரீகாந்த் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக வந்தனா புகார் அளித்து சட்டப் போராட்டத்தை மேற்கொண்டது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. காதலித்துவிட்டு ஸ்ரீகாந்த் ஏமாற்றியதாக விவாதம் மாறியதால் இந்த விவகாரம் அவரது பிம்பத்தைக் கடுமையாக பாதித்ததுடன் சினிமா வாய்ப்புகளையும் குறைத்தது.

தொடர்ந்து, ஸ்ரீகாந்த் வந்தனாவை திருமணம் செய்து கொண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் சில படங்களில் நடித்தார். ஆனால், எதுவும் அவருக்கு வெற்றிப்படமாக மாறவில்லை. விஜய், அஜித், சூர்யா, ஸ்ரீகாந்த் என அமைந்திருக்க வேண்டிய வரிசை, அந்த சர்ச்சை சமாச்சாரங்களால் முற்றிலும் மாறியது.

நண்பன் படத்தில் விஜய்யுடன் ஸ்ரீகாந்த்.
நண்பன் படத்தில் விஜய்யுடன் ஸ்ரீகாந்த்.

காத்திருந்து, காத்திருந்து 2012 ஆம் ஆண்டில் நண்பன் படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து வெற்றியைப் பெற்றார். ஆனால், அந்த வெற்றி ஸ்ரீகாந்த்துக்கு பெரிய மாற்றத்தைக் கொடுக்கவில்லை.

ஆனாலும், ஸ்ரீகாந்துக்கு இன்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஆண்டிற்கு ஒரு படத்திலாவது நடித்து விடுகிறார். அவை வெற்றி பெறவில்லை என்றாலும் தன் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகிறார்.

நிலைமை இப்படியிருக்க, இப்போது சந்திக்கக் கூடாத சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட ஸ்ரீகாந்த் தான் கொகைன் போதைப்பொருளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதுடன் தன் மகனின் நிலையைக் கூறி ஜாமீன் மனு கோரியிருக்கிறார்.

குடும்பப் பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் தொடர்ந்து போதைப்பொருளைப் பயன்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகனாக நடித்துவரும் ஸ்ரீகாந்த் இப்படி போதைப்பொருள் வழக்கில் சிக்கியது பலரிடமும் கோபத்தை ஏற்படுத்தியதுடன் அவர் மீதான பார்வையையும் மாற்றியிருக்கிறது. வந்தனாவுடனான சர்ச்சையில் சினிமா அவருக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கியது. சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல், தன்னுடைய பலமான குடும்ப & காதல் கதைகளில் முழு கவனத்தைச் செலுத்தாமல் ஆக்சன்களை நம்பியது உள்பட சில தவறுகளை ஸ்ரீகாந்த் செய்ததால் அவருக்கான இடம் அமையாமல் போனது.

ஆனால், இம்முறை போதைக்கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீதான பார்வைகள் கடுமையாக மாறியிருக்கும். ஸ்ரீகாந்த்தை வைத்து படம் இயக்கினால் சில எதிர்மறையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டுமே என தயாரிப்பாளர்கள் பின் வாங்கலாம். முறையான வாய்ப்புகள் அமையுமா உள்பட நிறைய கேள்விகளை இனி ஸ்ரீகாந்த் எதிர்கொள்ள வேண்டிவரும். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக வந்திருக்க வேண்டிய பலரும் தங்களின் தீய பழக்கங்களால் அந்த வாய்ப்புகளைக் கெடுத்துக்கொண்டனர். அந்த வரிசையில் ஸ்ரீகாந்த், ‘நான் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டேன்” எனக் கூறியிருப்பது அவருடைய ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com