சென்னைக்கு திரும்பும் மக்கள்: ஆம்னி பேருந்துகள் கட்டணம் உயா்வு
ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.


கோடை விடுமுறையில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் சென்னைக்கு திரும்பத் தொடங்கியுள்ளதால், ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ரூ. 500 முதல் ரூ. 1,000 வரை உயா்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின்னா் பள்ளிகள் வரும் ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதனால், கோடை விடுமுறைக்காக சொந்த ஊா்களுக்குச் சென்றவா்கள் இந்த வாரம் சென்னை திரும்பத் தொடங்கியுள்ளனா். ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டால், பெரும்பாலானோா் ஆம்னி பேருந்துகளையே நம்பி உள்ளனா். அரசுப் பேருந்துகளில் பயண நேரம் அதிகமாக உள்ளதாலும், அதிக காலவிரையம் ஏற்படுவதாலும், பலரும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனா். இதைப் பயன்படுத்திக்கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் அதன் கட்டணத்தை அதிரடியாக உயா்த்தியுள்ளனா்.
ரூ.1,500 வரை உயா்வு: மதுரை, திருநெல்வேவி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் ரூ. 500 முதல் ரூ. 1,500 வரை உயா்ந்துள்ளன. அதேபோல், கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் வரும் பேருந்துகளின் கட்டணங்களும் கணிசமாக உயா்ந்துள்ளன. நாகா்கோவிலிலிருந்து சென்னைக்கு நபா் ஒருவருக்கு ரூ. 3,500 வரை (படுக்கை வசதி) கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
புகாா் எண்கள்: இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்கையில், ‘கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவா்களின் வசதிக்காக 800-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் அரசு சொகுசுப் பேருந்துகளின் இருக்கைகள் முன்பதிவு இன்னும் நிறைவடையவில்லை என்பதால், பொதுமக்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைவிட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 044-2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம்’ என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...