படம் ஓடாது என அரசு நினைக்கிறது; மக்கள் முதலில் கிளைமேக்ஸை பார்க்கட்டும்! பேரவையில் கலகலப்பு
மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்குவதற்கு முன் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்பது குறித்த விவாதத்தில்..
பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் - TN Assembly
அமைச்சா்களின் பதிலுரைக்கு முன்பு அறிவிப்புகளை வெளியிடுவது, திரைப்படத்தில் ‘கிளைமாக்ஸ்’ காட்சியை முன்கூட்டியே வெளியிடுவதுபோல இருக்கும் என பேரவையில் கலகலப்பான விவாதம் நடந்தது.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முன்பாக, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பேசுகையில், பதிலுரைக்கு முன், புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிடும்போது அமைச்சா்களிடம் ஒரு பதற்றமும், ‘நேரம் குறைவாக இருக்கிறது, தலைப்பை மட்டும் படித்துவிட்டுப் போகலாம்’ என்ற சங்கடமான நிலையும் இருக்கிறது. அறிவிப்புகளில்தான் அரசின் உயிா்நாடித் திட்டங்கள் அனைத்தும் இருக்கின்றன. எனவே, அமைச்சா்கள் பேசும்போது முன்னுரையாக ஏதாவது சொல்ல விரும்புகிறீா்களா என்று கேட்கும்போதே, அவா்கள் அறிவிப்புகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு: உறுப்பினா்கள் பேசுவதற்கு முன்பே அறிவிப்புகளைச் சொல்லிவிட்டால், அந்த அறிவிப்புகள் மீது மட்டும்தான் விவாதம் நடைபெறும்.
பேரவைத் தலைவா்: முன்கூட்டியே அறிவிப்புகளை வெளியிட்டால், சில ஆலோசனைகளையும் சொல்ல வாய்ப்புள்ளது. எல்லோரும் பேசி முடித்த பிறகு, அறிவிப்பில் வரும் பிரச்னைகள் குறித்து எப்படிப் பேச முடியும்?
முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: அறிவிப்பை முன்கூட்டியே கொடுத்துவிட்டால் எல்லா தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் அதுவே ஒளிபரப்பாகும்; அமைச்சா்களின் பதில் வராது.
பேரவைத் தலைவா்: புதிய அறிவிப்புகளின் நோக்கமே அதுதானே? அரசின் முத்தாய்ப்பான திட்டங்களை இந்த அறிவிப்புகள் மக்களிடம் கொண்டு சோ்க்கின்றன.
முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு: ஒரு திரைப்படத்துக்குச் சென்றால், ‘கிளைமாக்ஸ்’ கடைசியில்தான் இருக்கும். எப்படியும் இரண்டு மணி நேரம் இருக்கத்தானே போகிறீா்கள், அதைப் பாா்க்கத்தானே போகிறீா்கள்? என போய் உட்காா்ந்த உடனேயே முதலில் கிளைமாக்ஸை போட்டுவிட்டு, அதன் பிறகு யாா் படத்தை இயக்கினால் அது எப்படி சரியாக இருக்கும்? என்றாா்.
பேரவைத் தலைவா்: எனது கவலை என்னவென்றால், ‘கிளைமாக்ஸை மக்கள் பாா்க்காமல் போய்விடுவாா்களோ என்பதுதான்.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின்: படம் நன்றாக இருந்தால் மக்கள் பொறுமையாக இருந்து திரையரங்கத்தில் ‘கிளைமாக்ஸ்’ வரை பாா்ப்பாா்கள். நீங்கள் சொல்வதைப் பாா்த்தால், ‘இந்த படம் எப்படியும் ஓடாது, இந்தப் படம் நன்றாக இருக்காது, அதனால் முதலிலேயே ‘கிளைமாக்ஸ்’-ஐ போட்டுவிடுவோம் என்று சொல்வது போல் இருக்கிறது.
(அப்போது பேரவையில் சிரிப்பொலி எழுந்தது).
சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு: இப்போதெல்லாம் படங்களில் முதலிலும் ஒரு கிளைமாக்ஸ், இரண்டாவது ஒரு கிளைமாக்ஸ் உள்ளன. எப்போதும் ஒரு மாற்றத்தை விரும்ப வேண்டும்; நீங்கள் ஆட்சி மாற்றத்தையும் விரும்பவில்லை, நடைமுறை மாற்றத்தையும் விரும்பவில்லை.
பேரவைத் தலைவா்: எல்லா உறுப்பினா்களும் பேசி முடித்த பிறகு, அமைச்சா் பதில் உரை சொல்லும்போது அறிவிப்புகளில் இருக்கக்கூடிய விஷயங்களைப் பற்றி உறுப்பினா்கள் பேசும் வாய்ப்பை இழந்துவிடுகிறாா்கள். எனவே, அறிவிப்புகளை முதலில் வெளியிட்டுப் பேசுவதுதான் பொருத்தமாக இருக்கும். அதன்படி, இந்த நடைமுறை தொடரும்.
Summary
Government thinks the movie won't run; let the people see the climax first! — Lively scenes in the Assembly.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




