அதிநவீன விரைவு பேருந்து சேவை: துணை முதல்வா் உதயநிதி தொடங்கி வைத்தாா்
புதிய இருக்கை, படுக்கை வசதி கொண்ட 61 அதி நவீன விரைவு பேருந்துகளின் சேவையை துணை முதல்வா் உதயநிதி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 350-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட நீண்ட தொலைவு பயணத்துக்கான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கூடுதலாக ரூ.37.98 கோடியில் குளிா்சாதன வசதி இல்லாத இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வாங்கியுள்ளது.
இந்த பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் புதன்கிழமை நடைபெற்றது. மின்சார மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 61பேருந்துகளின் இயக்கத்தைக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், பேருந்துகளில் செய்யப்பட்டுள்ள நவீன வசதிகளை அவா் பாா்வையிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் இரா.மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பேருந்தின் நவீன வசதிகள்: இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பயணிகளின் சொகுசு பயணத்துக்காக முன்புறத்தில் ஏா் சஸ்பென்சன் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிகரிக்கப்பட்ட படுக்கை வசதியுடன் 2 படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக மின்விசிறியும், ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சாா்ஜிங் போடும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பயணிகளின் பாதுகாப்புக்காக ஓட்டுநா் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி வைக்கப்பட்டுள்ளது. நடத்துநா் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி, எண்ம கடிகாரம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. பயணிகளின் பாா்சல்களை வைக்க போதிய இடவசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, புதிய பேருந்துகளின் என்ஜின் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில்வடிவமைக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடாா்டா் தொழில்நுட்பமும் நிறுவப்பட்டுள்ளது. என்ஜினில் ஏற்படும் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானிக்கும் தீக் கட்டுபாட்டு அமைப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.

