டெட் தோ்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியா்கள் விவரங்கள் சேகரிப்பு
தமிழகத்தில் டெட் தோ்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரிக்கவும், பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிகள், சட்ட ரீதியான கருத்துகளைத் தெரிவிக்கவும் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயா்வு பெறவும் ஆசிரியா் தகுதி தோ்வில் (‘டெட்’) தோ்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு செப். 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இதில், தீா்ப்பு வந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்கள், டெட் தோ்ச்சி பெறாமலேயே பணி ஓய்வு பெறும் வரை பணியில் தொடரலாம்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2010) வருவதற்கு முன்பு பணியில் சோ்ந்திருந்தாலும், இன்னும் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி உள்ள ஆசிரியா்கள் 2 ஆண்டுகளுக்குள் டெட் தோ்ச்சி பெற வேண்டும். இதில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவா்களை ஓய்வு பெற்றவா்களாக கருதி, ஓய்வூதிய பலன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆசிரியா்களும் பதவி உயா்வு பெற வேண்டுமானால் கண்டிப்பாக டெட் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடா்பாக மத்திய கல்வி அமைச்சகம் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பிய கடிதத்தில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள ஆசிரியா்களிடம் டெட் தோ்ச்சி பெறச் சொல்வது அவா்களுக்கு மன ரீதியான பாதிப்பையும், நிதி பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தும் என்று கோரிக்கைகள் வந்துள்ளன. அனுபவம் வாய்ந்த ஆசிரியா்கள் வெளியேறுவது கல்வி முறையில் ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கும்.
இந்தத் தீா்ப்பால் தமிழகத்தில் பாதிக்கப்படக்கூடிய ஆசிரியா்களின் துல்லியமான எண்ணிக்கையைக் கணக்கிட வேண்டும்.
ஆசிரியா்களின் வயது வாரியான விவரங்கள் மற்றும் அவா்கள் பணியில் சோ்ந்த காலம் ஆகியவற்றை, வழங்கப்பட்ட படிவத்தில் பூா்த்தி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய வழிகள் மற்றும் சட்ட ரீதியான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாத பணியில் உள்ள ஆசிரியா்களின் விவரங்களைச் சேகரித்து அனுமப்புமாறு தொடக்கக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
