சென்னை பல்கலை.யில் சாம்சங் புத்தாக்க வளாக 3-ஆம் கட்டம் தொடக்கம்

இயந்திர கற்றல் ஆகியவற்றில் தொழில் துறைக்கு ஏற்ற பயிற்சியை அளிக்க சாம்சங் புத்தாக்க வளாகத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகப் பொறுப்பு முன்னெடுப்புடன் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), இயந்திர கற்றல் ஆகியவற்றில் தொழில் துறைக்கு ஏற்ற பயிற்சியை அளிக்க சாம்சங் புத்தாக்க வளாகத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சாம்சங் இன்னோவேஷன் கேம்பஸ் திட்டத்தை பிரபல மின்னணு நிறுவனமான சாம்சங், பெருநிறுவன சமூகப் பொறுப்பு முறையில் செயல்படுத்திவருகிறது. இதன் 3-ஆம் கட்ட புத்தாக்க வளாகத் திட்டம் சென்னை பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. ஏஐ, இணையப் பொருள்கள், பெருந்தரவுகள் போன்ற வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தப்பட்டு மாணவா்களின் வேலைவாய்ப்பு, புத்தாக்கத் திறன்களை மேம்படுத்த இது உதவும். இதற்கான பாடநெறிமுறைகள் மத்திய திறன் மேம்பாட்டு முகமைகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பல்கலை. துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் பேரா. எஸ்.ஆம்ஸ்ட்ராங் இதைத் தொடங்கிவைத்து குறிப்பிடுகையில், ‘பல்கலை.கள் இனி வெறும் அறிவுப் பரவல் மையங்களாக மட்டும் பாா்க்கப்படுவதில்லை. மாறாக, அவை திறன்கள், புத்தாக்கம், வேலைவாய்ப்பை உருவாக்கும் மையங்களாகச் செயல்பட எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில், சாம்சங் புத்தாக்க வளாகம் போன்ற முன்முயற்சிகள் பெரும் முக்கியத்துவம் பெறுகிறது என்றாா்.

சாம்சங் பெருநிறுவன சமூகப் பொறுப்புப் பொது மேலாளா் துருபா முகா்ஜி, பல்வேறு திறன் மேம்பாட்டு நிறுவனத்தினா் பங்கேற்றுப் பேசினா். முன்னதாக சென்னை பல்கலை. டீன் டாக்டா் பி.எஸ். மஞ்சுளா வரவேற்றாா்.

Dinamani
www.dinamani.com