

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்னையால்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு பிரதமரின் நிகழ்ச்சி மாற்றப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளருக்கு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டியில், "தமிழகத்தின் கனவாக எய்ம்ஸ் மருத்துவமனை இருந்து வருகிறது. குறிப்பாக, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா, 2019-ல் நடைபெற்றது.
2021-ல் தேர்தல் நடைபெற்றது; அப்போதும் எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்படவில்லை. 2024-ல் தேர்தலின்போதும் எய்ம்ஸ் மருத்துவமனை முடிக்கப்படவில்லை.
தற்போது, 2026 தேர்தலும் வந்துவிட்டது. இன்னமும் முடிக்கப்படவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் முடிக்கப்படாததால்தான், பிரதமர் மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தை மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.
இந்தப் பிரச்னையை வருகிற நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் நான் கேள்வியெழுப்ப உள்ளேன்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டு, கூடிய விரைவில் மதுரையில் செயல்படத் தொடங்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 23) நடைபெற்றது. இந்தக் கூட்டம் முதலில் மதுரையில் நடத்தப்படவிருப்பதாகக் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.