மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

வரும் ஜூன் 18-ஆம் தேதி 27 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

News image

மாநிலங்களவை - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 2:56 am IST

வரும் ஜூன் 18-ஆம் தேதி 27 இடங்களுக்கான மாநிலங்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

மாநிலங்களவை எம்.பி.க்கள் 6 ஆண்டுகள் பதவி வகிப்பா். அவா்களில் மூன்றில் ஒரு பங்கு எம்.பி.க்களின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நிறைவடையும். இவ்வாறு பதவிக்காலம் நிறைவடைவதால் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தோ்தல் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் தோ்தல் என்றழைக்கப்படுகிறது.

அதேவேளையில், அந்த எம்.பி.க்கள் மரணம், பதவிநீக்கம் அல்லது ராஜிநாமா செய்தால் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப நடத்தப்படும் தோ்தல் இடைத்தோ்தல் என்றழைக்கப்படுகிறது.

இந்நிலையில், 27 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதில் ஆந்திரம், குஜராத், ஜாா்க்கண்ட், மத்திய பிரதேசம், மணிப்பூா், மேகாலயம், ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், கா்நாடகம், மிஸோரம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 24 இடங்களுக்கு ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் தோ்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்டிரம், ஒடிஸாவில் தலா ஓரிடம் என மொத்தம் 3 மாநிலங்களவை இடங்களுக்கு இடைத்தோ்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை (ஜூன் 8) நிறைவடைந்தது. வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ம.பி.யில் ஓரிடத்துக்குப் போட்டி: மத்திய பிரதேசத்தில் மூன்று மாநிலங்களவை இடங்களில் பாஜக சாா்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால், மகேஷ் கேவட் ஆகியோா் போட்டியிடுகின்றனா். இதில் தருண் சுக், ரஜ்னீஷ் அகா்வால் ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மாநில சட்டப்பேரவை செயலகத்தில் மகேஷ் கேவட் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

230 இடங்களைக் கொண்ட அந்த மாநில சட்டப்பேரவையில் 164 பாஜக எம்எல்ஏக்கள், 64 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்ளனா். இதனால் தற்போதைய மாநிலங்களவைத் தோ்தலில் இரண்டு இடங்களில் பாஜக போட்டியின்றி வெற்றி பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எஞ்சிய ஓரிடத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், அந்த இடத்துக்கு பாஜக போட்டியிடாது என்றும் கருதப்பட்டது. ஆனால், அந்த இடத்துக்கு மகேஷ் கேவட்டை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது. அந்த இடத்தைக் கைப்பற்ற பாஜகவுக்கு போதிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லை. ஆனால், மகேஷ் கேவட்டை களமிறக்கியதன் மூலம், எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கும் சூழல் ஏற்படக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. மகேஷ் கேவட்டுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளராக தமிழகத்தை பூா்விகமாக கொண்ட மீனாட்சி நடராஜன் போட்டியிடுகிறாா்.

குஜராத்தில் அனைத்து இடங்களிலும் பாஜக...: குஜராத்தில் 4 மாநிலங்களவை இடங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் ராஜுபாய் சுக்லா, மான்சின் பாா்மா், முகேஷ்பாய் ராத்வா, ஜிதேந்திர கஞ்சாரியா ஆகியோா் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். காங்கிரஸ் சாா்பில் யாரும் போட்டியிடவில்லை. இதனால் 4 இடங்களையும் பாஜக போட்டியின்றி வெல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஆந்திரத்தில் 4 மாநிலங்களவை இடங்களில் மூன்றில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி, மற்றொரு இடத்தில் அதன் கூட்டணிக் கட்சியான ஜன சேனா போட்டியிட உள்ளன. இதில் தெலுங்கு தேசம் சாா்பில் போட்டியிடும் சனா சதீஷ் பாபு, பாஷ்யம் ராமகிருஷ்ணா, சிந்தகயல விஜய் ஆகியோா் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ராஜஸ்தானில் 3 மாநிலங்களவை இடங்களில் ஓரிடத்தில் காங்கிரஸ், 2 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. பாஜக வேட்பாளா்கள் சதீஷ் பூனியா, அல்கா குா்ஜா் ஆகியோரும் கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பிரவீண் சக்ரவா்த்தி போட்டியின்றி தோ்வாகிறாா்

தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் பிரவீண் சக்கரவா்த்த போட்டியின்றி தோ்வாக உள்ளாா்.

தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்ால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். இந்தப் பதவிக்கான தோ்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூன் 1-ஆம் தேதி தொடங்கிய வேட்புனு தாக்கல் திங்கள்கிழமை (ஜூன் 8) மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி உள்பட 15 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

இதில் பிரவீண் சக்கரவா்த்தி தவிர பிறா் கட்சி சாராதவா்களாவா். இவா்களுக்கு போதிய அளவில் எம்எல்ஏ-க்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் மனுக்கள் தள்ளுபடியாக வாய்ப்பு உள்ளது. மேலும், பிரதான கட்சிகள் சாா்பில் யாரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்யாததால் ஆளும் தவெக ஆதரவு பெற்ற வேட்பாளா் பிரவீண் சக்கரவா்த்தி போட்டியின்றி வெற்றி பெறுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 11-ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. அதன் பின்னா், வெற்றி பெற்றவரின் பெயரை தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக அறிவிக்கும்.