மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மின்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “மாற்றத்தைத் தருகிறேன்” என்று சொல்லிமக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்ற தவெக அரசு தனது ஒரு மாத கால ஆட்சியில்- வாக்களித்த மக்களு்கு பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. 6 மணி நேரம், 12 மணி நேரம் மின்வெட்டு என தாங்கமுடியாத துயரத்தில்- நள்ளிரவிலும் பொதுமக்கள் நடுத் தெருவிற்கும், சாலைகளுக்கும் வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். “சாலை மறியல் இல்லாத இரவுகள் இல்லை” என்ற நிலை- மாநிலத்தின் தலைநகரிலும், மற்ற பகுதிகளிலும் இந்த ஆட்சியின் நிர்வாக அவலத்தை வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
“பதவியேற்றவுடன் மாற்றத்தைத் தருவேன்” என்ற பஞ்ச் டயலாக் பேசிய முதலமைச்சர் மவுனமாக இருக்கிறார். மின்வெட்டுக்குப் பதிலும் சொல்வதில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திப்பது இல்லை. பொறுப்பாக பதில்சொல்ல வேண்டிய மின்துறை அமைச்சரோ தினம் ஒரு Conspiracy theory எழுதி அதை ஊடகங்களிடம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். தங்கள் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க “Fake Reels” போடுவது போல் தினமும் திசை திருப்பும் வேலையை மட்டும் செய்கிறார். “ஃபியூஸ் கேரியரை திருடுகிறார்கள்” என்று சொல்லி ஒரு சிசிடிவி கேமரா வீடியோவை பதிவிடுகிறார் அமைச்சர். பகலில் நடக்கும் திருட்டுக்கு இரவில் எப்படி மின் தடை ஏற்படுகிறது? என்று சாதாரண பாமரனுக்கும் கேள்வி எழும் என்பதை அமைச்சர் யோசிக்கவில்லையா? ஃபியூஸ் திருடு போனால் மொத்தமாக தானே மின்சாரம் போக வேண்டும்? விட்டுவிட்டு போவது எப்படி? பிரச்னையைதீர்ப்பதற்குப் பதில் அமைச்சர் கதை அளக்கிறார். கஷ்டப்படும் மக்கள் காதில் பூ சுத்துகிறார். அடுத்து “ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்” என்றார். காவல்துறையே விசாரித்து அப்படி காணாமல் போன “ஹார்ட் டிஸ்குகளில்” முக்கியத் தகவல்கள் ஏதும் இல்லை என்று கூறிவிட்டது. “ஹார்ட் டிஸ்க்” திருட்டுக்கும் “கரன்ட் கட்டுக்கும்” என்ன சம்பந்தம்? மூன்றாவதாக “மின்வாரியப்பணியாளர்கள் சதி செய்கிறார்கள்” எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் களத்தில் நிற்கும் தனது பணியாளர்கள் மீதே பழி போட்டார்.
மக்களும் குழந்தைகளும் துன்பத்தில் இருப்பதை ரசிக்க மின் துறை பணியாளர்கள் என்ன அவர்களின் தலைவர் போன்றவர்கள் என்று நினைக்கிறாரா அமைச்சர்? தன் கையாலாகத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டகரன்ட் கட் காரணம் குறித்து இப்படியா கப்சா விடுவது?
தவெக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம்“மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை விடும்”அவலம் தான்! தங்கள் பயிர்கள் தண்ணீர் இன்றி காய்வதால் விவசாயிகள் போராடும் துயரம்தான்! பத்திரிக்கையாளர்களை பார்த்தவுடன் பவர் கட்குறித்து அமைச்சர் சொல்லும் காரணங்கள் எல்லாமே இந்த தவெக அரசு சீரான மின்சாரத்தை அளிக்க முடியாமல் திணருகிறது என்பதுதான்!
ஆனால் எதனால் மின்வெட்டு நடக்கிறது? என்பதுபற்றி அதிகாரிகளை வைத்து அமைச்சரோ, அமைச்சரை வைத்து முதலமைச்சரோ ஒரு ரிவ்யூ மீட்டிங்காவது நடத்தியிருக்கிறார்களா? இல்லை! எதுவுமே இல்லை! இதுவும் தவெக ஆட்சியில்நடத்துள்ள மாற்றம்தான்! ஒரே மாதத்தில் மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள படு மோசமான நிர்வாக தோல்வி இந்த ஆட்சியின் மாற்றம்தான்!
தமிழ்நாட்டின் மின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்பது எந்த அரசும் உணர வேண்டிய உண்மை. அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப திறமையாக நிர்வகித்து- மக்களை இன்னலுக்கு உட்படாமல் காப்பதுதான் ஆட்சியின் நிர்வாகத் திறமை. அதைத்தான் எங்கள் கட்சித் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்தது. புள்ளிவிவரங்களுடன் சொல்ல வேண்டுமென்றால், 2021ல் அதிகபட்ச உச்சமாக 16,481 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. 2022ல் 17,196 மெகாவாட், 2023ல் 18,053 மெகாவாட், 2024ல் 19,049, 2025ல் 20,148 மெகாவாட், 2026 ஏப்ரலில் 20,974 மெகாவாட் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரித்தாலும், திராவிட மாடல் ஆட்சி இருந்தவரை சீரான மின்சாரத்தை பொதுமக்களுக்கு வழங்கியிருக்கிறோம்.
சென்னையைப் பொருத்தவரை கடந்த ஆண்டு மின்தேவை 4,663 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. 2024ல் 4,769 மெகாவாட் உச்சத்தைத் தொட்டது. அப்படி இருந்தாலும் மின்வெட்டு எங்குமே நடக்கவில்லை. பொதுமக்கள் நள்ளிரவில் கைக்குழந்தைகளுடன், வயதானவர்களுடன், நோயாளிகளுடன் தெருவுக்கு வந்து போராடும் நிலை ஏற்படவில்லை. அது மட்டுமா? இந்தியாவிலேயே மிக குறைவான மின்வெட்டு கொண்ட மாநிலம் தமிழ்நாடு. வளர்ந்த நாடுகளுக்கு இணையான சேவையை வழங்குகிறது என்று ஒன்றிய அமைச்சரே தமிழ்நாட்டைப் பாராட்டினார்.
கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் 2 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி தடையில்லா மின்சாரம் கொடுத்தோம். நாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதற்கு முன்பு வருவாய்க்கும், செலவினத்திற்கும் இடையே இருந்த இடைவெளியை 5000 கோடி ரூபாயாகக் குறைத்தது திராவிட மாடல் ஆட்சி. எண்ணற்ற மின் உற்பத்திக்கான திட்டங்கள், துணை மின் நிலையம், மின்வழித்தடம், மின்மாற்றிகள் அமைத்தல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 90,000 மின்மாற்றிகள் புதியதாகவும், பழுதடைந்த மின்மாற்றிகளை மாற்றியும் மின்வாரியத்தின் நிர்வாகம் சீரமைக்கப்பட்டது திராவிட மாடல் ஆட்சியில்தான்!
ஆகவே, நிர்வாகம் தெரியாமல் மற்றவர்கள் மீது பழி போடுவதற்கே “பத்திரிக்கையாளர் சந்திப்பை” பயன்படுத்துவதை மின்துறை அமைச்சர் கைவிட்டு, மின்வெட்டு பிரச்சனையை தீர்த்து பொதுமக்கள்இரவில் நிம்மதியாக உறங்க, பள்ளிக்கூடங்கள் மூடாமல் இருக்க, விவசாயிகள் வேதனைக் கண்ணீர் வடிக்காமல் இருக்க த.வெ.க அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இன்ஸ்டா இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு கண்டண்ட் கொடுக்கும் வேலையை செய்யாமல், ரியலாக நிர்வாகம் செய்ய முயலவேண்டும். எங்கள் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல ”பலரை சில காலம் ஏமாற்றலாம்; சிலரைப் பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது” என்பதை மின்வெட்டை தடுப்பது எப்படி எனத் தெரியாமல் தத்தளிக்கும் மின்துறை அமைச்சரும், இப்படியொரு திறமையற்ற அமைச்சரை நியமித்து மக்களை சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கியிருக்கும் முதலமைச்சரும் “ரீல்ஸை” மறந்து “ரியாலிட்டிக்கு” வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Summary
Former Electricity Minister V. Senthil Balaji has stated that war-footing measures must be taken to eliminate power cuts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











