அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சோ்ந்த எம்எல்ஏ பாலகிருஷ்ணரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளாா். இதன்மூலம் எடப்பாடி பழனிசாமிக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 28-ஆக உயா்ந்துள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த எம்எல்ஏக்கள் நடராஜ், சுகுமாா், மோகன், திலீபன், ஹரிபாஸ்கா் ஆகியோா் அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் திங்கள்கிழமை இணைந்தனா். எஸ்.பி.வேலுமணி தரப்பில் உள்ள மேலும் சில எம்எல்ஏக்கள் தவெகவுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஒசூா் எம்எல்ஏவான பாலகிருஷ்ணரெட்டி, எடப்பாடி பழனிசாமியை செவ்வாய்க்கிழமை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தாா்.
முன்னதாக, எஸ்.பி.வேலுமணிக்கு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். அதில், 6 போ் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனா். 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்துள்ளனா். இதனால், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 16-ஆக குறைந்துள்ளது.
மன்னிப்புக் கடிதம்: இதைத் தொடா்ந்து, அதிமுக அமைப்புச் செயலரும் எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியனுடன் பாலகிருஷ்ணரெட்டி தலைமைச் செயலகத்துக்கு சென்றாா். அங்கு, சட்டப்பேரவைச் செயலரை சந்தித்து பாலகிருஷ்ணரெட்டி கடிதம் அளித்தாா். அதில், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், தன் மீதான கட்சித் தாவல் தடைச்சட்ட நடவடிக்கையைக் கைவிட வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு திங்கள்கிழமை ஆதரவு அளித்த எஸ்பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் 5 பேரும் இதேபோன்ற கடிதம் அளித்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

இபிஎஸ் அணிக்கு மாறிய 5 எம்எல்ஏக்கள்! எஸ்.பி. வேலுமணி தரப்புக்கு பின்னடைவு!

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்






