ஜெம் வீரமணி வீட்டில் பள்ளம் தோண்டி சோதனை ஏன்? சிறப்பு புலனாய்வுக் குழு விளக்கம்
ஜெம் வீரமணி வீட்டில் பள்ளம் தோண்டி சோதனை செய்தது ஏன் என்பது பற்றி சிறப்பு புலனாய்வுக் குழு விளக்கம் அளித்துள்ளது.

பள்ளம் தோண்டப்பட்ட இடம் - பிரதி படம் - file photo
சிறுமி புதைக்கப்பட்டுள்ளதாக வீரமணியின் கார் ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவரது வீட்டில் நீச்சல்குளத்தின் அருகில் தோண்டி சோதனை நடத்தப்பட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணியின் மகள் அர்ச்சனா, வெளிநாடுச் செல்லவிருந்த நிலையில் தன்னை விமானத்தில் இருந்து இறங்கச் செய்து, சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தில் மனித உரிமை மீறல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அர்ச்சனா தரப்பில், உடல் நலம் பாதிக்கப்பட்ட இரு பெண்கள் மட்டும் வசிக்கும் வீட்டிற்குள், விசாரணை என்ற பெயரில் நுழைந்த போலீஸார், நீச்சல்குளத்தை இடித்து சேதப்படுத்தியதாகவும், சோதனைக்கு 24 மணி நேரத்துக்கு முன் நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும், சோதனை விடியோப் பதிவை தங்களுக்கு வழங்க வேண்டும், விசாரணையின்போது, வழக்குரைஞரை உடனிருக்க அனுமதித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பு வழக்குரைஞர், வீரமணியின் வீட்டு நீச்சல்குளம் அருகே சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதாக அவரது ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாகவும், பெண்கள் வசிக்கும் பகுதிக்குள் காவல்துறையினர் செல்லவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும், காவல்துறையினர் விமானத்துக்குள் சென்று அர்ச்சனாவை அழைத்து வரவில்லை. விமான நிறுவன ஊழியர்கள்தான் அவரை அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதையடுத்து வீரமணியின் வீட்டில் நடந்த சோதனையில் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதுதொடர்பான விவரங்களை பதில் மனுவில் தெரிவிப்பதாக சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும், அர்ச்சனா மற்றும் அவரது தாயாரை விசாரிப்பதாக இருந்தால், அவர்களது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தப்படும் என்று சிறப்புப் புலனாய்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 24-ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இடைப்பட்ட காலத்தில் அர்ச்சனா அல்லது அவரது தாயாரை விசாரிப்பதாக இருந்தால், விசாரணையில் கேட்கப்படும் கேள்விகளை அறிந்து கொள்ள முடியாத தொலைவில் வழக்குரைஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

