நீண்டகால மரபை மதித்து தவெக அரசு எடுத்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது: ஜவாஹிருல்லா
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசு எடுத்த நிலைப்பாடு தொடர்பாக மமக தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டியுள்ளார்.

ஜவாஹிருல்லா
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தவெக அரசு எடுத்த நிலைப்பாடு தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், திருப்பரங்குன்றம் மலை மீது வழக்கமாக மகா தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதே தவிர, தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படவில்லை.
அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில்,” திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு பாராட்டுகள்.
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எந்தவித சமரசமும் இல்லை என்பதைத் தமிழ்நாடு அரசு தனது முடிவின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காலங்காலமாக தீபம் ஏற்றப்பட்டு வரும் உச்சிப்பிள்ளையார் கோவில் பகுதியில் தீபம் ஏற்றுவதே மரபு. இந்த மரபை மாற்றி, சர்ச்சைக்குரிய நில அளவை கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அழுத்தத்திற்கு அடிபணியாமல், பாரம்பரிய நடைமுறையை நிலைநாட்டியிருப்பது வரவேற்கத்தக்கது.
அரசு என்பது அழுத்தங்களுக்குப் பணிந்து முடிவெடுக்கும் அமைப்பு அல்ல; சட்டம், மரபு, வரலாறு மற்றும் சமூக நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டு உறுதியுடன் செயல்பட வேண்டிய அமைப்பு!
மத உணர்வுகளைத் தூண்டி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்காமல், நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபை மதித்து அரசு எடுத்துள்ள இந்த நிலைப்பாடு பாராட்டுக்குரியது.
திருப்பரங்குன்றத்தின் பாரம்பரியமும் மத நல்லிணக்கமும் காக்கப்பட வேண்டும். எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணியாமல், சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று மரபின் அடிப்படையிலும் அரசு தொடர்ந்து உறுதியுடன் செயல்பட வேண்டும்.
பாரம்பரியத்தைக் காப்பது பலவீனமல்ல; அது அரசின் பொறுப்புணர்வுக்கும் உறுதிக்கும் அடையாளம்!
தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை மனதாரப் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
The stance taken by the TVK government, in respecting long-standing tradition, is commendable: Jawahirullah
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

