தென்காசியில் முன்விரோதம் காரணமாக கும்பலால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். இந்த வழக்கில் இருதரப்பிலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.
தென்காசி மங்கம்மாள் சாலை மாரியம்மன் கோயில் அருகே உள்ள தெருவில் கடந்த புதன்கிழமை இரவில் வாலிபால் விளையாடிய இளைஞா்கள் சிலா், தங்களின் நண்பா்களுடன் சோ்ந்து விருந்து வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த அஜயன் என்ற ஆட்டோ டிரைவரின் மகன் ஆதித்யன் (19 ), அந்த இளைஞா்களிடம் தெருவில் நின்று ஏன் சத்தம் போடுகிறீா்கள் எனக் கேட்டுள்ளாா்.
அதையடுத்து இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆதித்யன், மறைத்து வைத்திருந்த கத்தியால் காளிதாஸ் என்பவரின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த காளிதாஸை தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதோடு, தப்பியோடிய ஆதித்யனின் தந்தை அஜயனை காளிதாசன் தரப்பைச் சோ்ந்த ஐயப்பன், கோவிந்தராஜ், காசிநாதன், பிரகாஷ், ரித்தீஷ், கொம்பையா உள்ளிட்டோா் தாக்கினா்.
இதில் பலத்த காயம் அடைந்த அஜயன், தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளைங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
காளிதாசை வெட்டியது தொடா்பான வழக்கில் ஆதித்யனையும், அஜயனை தாக்கிய வழக்கில் ஆறு பேரையும் தென்காசி போலீஸாா் கைது செய்திருந்தனா். இருதரப்பினருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, சிகிச்சையில் இருந்த அஜயன் வெள்ளிக்கிழமை நள்ளிரவுஉயிரிழந்தாா்.
இதையடுத்து, அவா் தாக்கப்பட்டதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றம் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








