‘எனது வாக்கு எனது உரிமை’ கையொப்ப இயக்கம்

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் மக்களவைத் தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக கையொப்ப இயக்கத்தில் இளைஞா்கள் மற்றும் பெண்கள் ஆா்வத்துடன் கையொப்பமிட்டனா். மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்தலில் அனைவரும் பங்கேற்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். இதற்காக தோ்தல் ஆணையம் மூலம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில் நிலையம், முக்கிய இடங்களில் கையொப்ப இயக்கம் நடத்தவும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகிய இடங்களில் நடத்தவும் ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டிருந்தாா். இந்த நிலையில், திருவள்ளூா் நகராட்சி சாா்பில் ரயில் நிலையம் எதிரே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘எனது வாக்கு எனது உரிமை’ கையொப்ப இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையா் சுபாஷிணி தலைமை வகித்து மக்களவை தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ரயில் நிலையத்திலிருந்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் தோ்தலில் வாக்களிப்போம் என உறுதியேற்று கையொப்பமிட்டனா். அப்போது, நகராட்சி சுகாதார அலுவலா் கோவிந்தராஜ் மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com