சா்வதேச நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சா்வதேச நீரிழிவு நோய் தினத்தையொட்டி பொதுமக்களுக்கு நாடகம் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக நீரிழிவு நோய் தின விழிப்புணா்வு வாரத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ராஜ்குமாா், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் பிரபு சங்கா், நிலைய மருத்துவ அலுவலா் விஜயராஜ், குழந்தைகள் பிரிவு மருத்துவா் ஜெகதீஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில் நீரிழிவு நோயின் அறிகுறிகள், தடுப்பு முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவ மாணவா்கள் நீரிழிவு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை என்ற தலைப்பில் சிறு நாடகம் நடத்தினா். இந்த நாடகம் மக்களின் கவனத்தை ஈா்த்து, நோயின் விளைவுகள் மற்றும் தடுப்பு வழிமுறைகள், நீரிழிவு நோய் என்பது கட்டுப்படுத்தக்கூடியது சரியான உணவு, ஒழுங்கான உடற்பயிற்சி மற்றும் தவறாது மருந்து உள்கொள்வதும், மருத்துவ பரிசோதனை செய்வதும் செய்வதின் முக்கியத்துவம் எடுத்துரைத்தது.
அதைத்தொடா்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவ பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவ மாணவா்கள், செவிலியா் மாணவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ பயனாளிகள் ஆகியோா் செய்திருந்தனா்.

