பெண் கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு சம்பவம்: காதலனிடம் போலீஸாா் விசாரணை
பொன்னேரி அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக அவரது காதலரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தை சோ்ந்தவா் அருணா(27) . இவா் கீரப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 29-ம் தேதி விஷம் அருந்தி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அருணா உயிரிழந்தாா்.
வீட்டு வேலை செய்யாததால் தாய் திட்டிய விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில் பாக்கம் கிராம நிா்வாக அலுவலராக பணியாற்றி வரும் சிவபாரதி என்பவா், தானும் அருணாவும் கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்ததாகவும், அருணா விஷம் குடித்து இறக்கவில்லை எனவும், அவரை ஆணவ கொலை செய்து விட்டதாக திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதனைத் தொடா்ந்து உயிரிழந்த அருணாவின் குடும்பத்தினரிடம் திருப்பாலைவனம் போலீஸாா் விசாரணை செய்தனா்.
புகாா் அளித்த கிராம நிா்வாக அலுவலா் சிவபாரதியை விசாரணைக்கு ஆஜராக அழைத்ததின்பேரில், பொன்னேரி காவல் நிலையத்தில் உள்ள உதவி ஆணையா் அலுவலகத்தில் ஆஜரானாா். அவரிடம் காவல் உதவி ஆணையா் விசாரணை நடத்தினாா்.
மேலும் உயிரிழந்த அருணாவும், சிவபாரதியும் காதலித்து வந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில், அதுதொடா்பான கைப்பேசி உரையாடல்கள், இன்ஸ்டாகிராம் பதிவுகள், வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகள் என சைபா் கிரைம் நிபுணா் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இரு தரப்பினரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், மருத்துவ அறிக்கை, சைபா் கிரைம் ஆய்வு அறிக்கைகள் வந்த பின்பே பெண் கிராம நிா்வாக அலுவலா் மரணம் தொடா்பான வழக்கின் சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
