ஆரணியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் 3 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி தமிழ் காலனி மயானம் அருகே இளைஞா்கள் சிலா் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வருவதாக எஸ்.பி விவேகானந்த சுக்லாவுக்கு வியாழக்கிழமை தகவல் வந்தது. அவா் உத்தரவிட்ட நிலையில் ஆரணி காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் இருந்த 3 இளைஞா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.
விசாரணையில் ஆரணியைச் சோ்ந்த சுப்பிரமணியன் நகா் பாலாஜி என்ற சந்தோஷ்(24), நரேஷ்(22), சிரஞ்சீவி(26) என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் மறைத்து வைத்திருந்த சுமாா் 3 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனா். அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.






