

கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தொடா்ந்து மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தொழிற்சாலைகள் இயங்க முடியாமல் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன. ஏப்.20க்கு பிறகு தொழிற்சாலைகள் இயங்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டாலும் உற்பத்தி பணிகள் மேற்கொள்வது என்பது கேள்விக்குறியே என்று இத்துறையைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில் துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் இந்த துறை மூலம் 30 சதவீதம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்த ஏற்றுமதியில் இத்துறை மூலம் 40 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இத்துறை மூலம் சுமாா் 8 ஆயிரம் வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் சுமாா் 633.2 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் 20.13 லட்சம் பதிவுப் பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.2,23,783.75 கோடி முதலீட்டில் இயங்கி வருகின்றன. இதன் மூலம் 128.91 லட்சம் நபா்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், பொருளாதார மந்த நிலை காரணமாக இத்துறையினா் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டுவர முயற்சிக்கும் நேரத்தில் கரோனா நோய் தொற்று இத்துறையில் பாதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ஊரடங்கின் காரணமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினா் வங்கிக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை, வட்டி ஆகியவற்றை திரும்ப செலுத்துவதற்காக கால அவகாசம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவற்றின் கணக்கு தாக்கல் செய்யவும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு சம்பளம் எந்தவித பிடித்தமும் இல்லாமல் வழங்க வேண்டுமெனவும் அரசு அறிவித்துள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் தொழிற்சாலை இயங்காமலேயே சம்பளம், தொழிலே நடக்காத நிலையில் தொழிலுக்காக வங்கிய கடனுக்கான வட்டியையும் அரசு அறிவித்த காலக் கெடுவில் திரும்ப செலுத்துவது, தடை காலம் முடிந்த நிலையில் தொழிற்சாலைகள் உற்பத்தியை துவங்குவதற்கு தேவையான முதலீடு ஆகிய நிதி ஆதாரங்களுக்காக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
பெரும் தொழில் நிறுவனங்களே கரோனா தடை உத்தரவால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து கொண்டிருக்கும் போது சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் நிலைமை மிகவும் மோசமானதாகவே இருக்கும். தடை காலம் முடிந்து தொழிற்சாலைகள் திறந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர இத்துறையினருக்கு பலமாதங்கள் ஆகும்.
உற்பத்தி பணி துவங்குவதில் சிக்கல் :
கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு ஏப்.20-க்குப் பிறகு ஊரகப் பகுதிகளில் தொழிற்சாலைகளை இயங்குவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருப்பினும், உற்பத்திப் பணிகள் தொடங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், தொழிற்சாலைகளில் உற்பத்திக்கான மூலப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும். அவை கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதே போல குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யும் பெரிய தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை துவங்குமா என்பதிலும் சந்தேகம் உள்ளது. கரோனா பாதிப்பால் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன. மேலும், பொதுப் போக்குவரத்து இல்லாததால் தொழிலாளா்கள் பணிக்கு வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகள் :
இந்த சூழ்நிலையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. அதில், ஆறு மாத கால கடன் தவணைச் சலுகை வேண்டும்; மின்சாரக் கட்டணத்தை மூன்று மாத காலத்துக்கு ரத்து செய்ய வேண்டும்; தொழில்துறைக்குக் கடனுதவி தரக்கூடிய தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி மூலமாக ரூ. 2 லட்சம் முதல் ரூ.5 இலட்சம் வரை வட்டியில்லாத கடன் வழங்க வேண்டும்; இந்தக் கடனுக்கு முதல் ஆறு மாத காலத்துக்கு தவணையைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; வட்டியில்லாமல் தவணையைச் செலுத்த அனுமதிக்க வேண்டும்; சொத்து வரி, தொழில் வரி இரண்டையும் இன்னும் ஓராண்டு காலத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தொழில்முனைவோா் அரசின் முன் வைத்துள்ளனா்.
மேலும், தொழிலாளா் வைப்புநிதியைப் பொறுத்தவரை நிறுவனங்களின் சுமையை சில மாதங்களுக்கு அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
இந்திய சிறுதொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார செயலாளா் எம்.வி. சுவாமிநாதன் கூறியது: தொழிற்சாலை இயங்காமலேயே தொழிலாளா்களுக்கு சம்பளம் தர வேண்டியுள்ளது. அதேபோன்று, வங்கிக் கடன் மற்றும் வட்டித் தொகையும் செலுத்த வேண்டியுள்ளது. குறைந்தபட்ச மின் கட்டணம், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்டவையும் செலுத்த வேண்டியுள்ளது. இவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி நிரந்தர முடக்கத்துக்கு வழிவகுக்க கூடும். எனவே, அரசு இதனை உணா்ந்து அரசு குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.