/

இந்திய இளைஞர்களை ஆக்கிரமித்த இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவுகளின்படி சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராம் இந்திய இளைஞர்களிடையே மிகவும் விரும்பப்படும் சமூக ஊடக தளமாக உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 அக்டோபர் 2020, 10:00 am

DIN

சமீபத்தில் வெளிவந்த ஆய்வு முடிவுகளின்படி இன்ஸ்டாகிராம் இந்திய இளைஞர்களிடையே மிகவும் விரும்பப்படும் சமூக ஊடக தளமாக உருவெடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 

தற்போது உலகம் முழுவதும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை சமூக ஊடகங்கள் பெற்றுள்ளன என்றால் அது மிகையல்ல. தங்களது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் சமூக ஊடகத்தில் பதிவேற்றி இளைஞர்கள் மகிழ்ந்து வருகின்றனர். 

தொடர்ந்து முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப், சுட்டுரை(ட்விட்டர்) உள்ளிட்ட பல்வேறு தளங்களில் நாளுக்கு நாள் புதிய பயனர்கள் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்திய இளைஞர்களிடையே பெரும்பாலும் விரும்பப்படும் சமூக ஊடகத் தளமாக இன்ஸ்டாகிராம் உள்ளது தெரியவந்துள்ளது.

தனியார் நிறுவனத்தின் ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 80 சதவிகிதத்தினர் சமூக ஊடகத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.  அவர்களில் 70 சதவிகிதத்தினர் தங்களின் விருப்பமான சமூக ஊடகத் தளமாக இன்ஸ்டாகிராமையும், 20 சதவிகிதத்தினர் முகநூலையும் குறிப்பிட்டுள்ளனர்.  

கரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் யூடியூப் அதிக கவனத்தை ஈர்த்ததுள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 98 சதவிகிதம் பேர் கரோனா தொற்று பேரிடர் காலத்தில் யூடியூப்பை தங்களது தொலைபேசிகளில் நிறுவியுள்ளனர். அதைத் தொடர்ந்து நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 75 சதவீதம் பேர் தங்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக இணையத்தைப் பயன்படுத்துவதாகவும், அதனைத் தொடர்ந்து விடியோ மற்றும் ஓ.டி.டி. தளங்களை பயன்படுத்துவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

49 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரமும், 30 சதவிகிதத்தினர் ஒரு நாளைக்கு 6 மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.