பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.7,819 கோடி சரிவு

உலக அளவில்  சீனா, வங்கதேசம், வியத்நாம், இலங்கை, இந்தியா  உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.7,819 கோடி சரிவு
Updated on
2 min read

உலக அளவில்  சீனா, வங்கதேசம், வியத்நாம், இலங்கை, இந்தியா  உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. 

9 மாதங்களில் ரூ.7,819 கோடி சரிவு: இதனிடையே 2020}21 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் இந்தியாவில் இருந்து ரூ.32,753 கோடிக்கு மட்டுமே பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2019}20 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.40,572 கோடிக்கு பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.  இந்திய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமானது 2019}20 ஆம் ஆண்டை விட தற்போது ரூ.7,819 கோடி சரிவடைந்துள்ளதாக மத்திய அரசின் டிஜிசிஐ & எஸ் ((Directorate General of Commercial Intelligence and Statistics) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 பருத்தி இறக்குமதி மீதான வரியை நீக்க வேண்டும்: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் பருத்தி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத சுங்க வரியை நீக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  கரோனா நோய்த் தொற்று காரணமாகவே கடந்த ஆண்டு மார்ச் முதல் பின்னலாடை ஏற்றுமதி சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா தொற்றாளர்கள் பயன்படுத்திய படுக்கை உறைகள் (பெட் கவர்கள்) மாற்றப்படுகின்றன. வெளிநாடுகளில் இதன் தேவை அதிகரிப்பு காரணமாக பருத்தியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. ஆகவே, பருத்தி, நூல் விலை உயர்வுக்குத் தகுந்தவாறு ஏற்றுமதியாளர்கள் தங்களுக்கு ஆர்டர் கொடுக்கும் வெளிநாட்டு வர்த்தகர்கள், வர்த்தக நிறுவனங்களிடம் உற்பத்தி செய்யும் பின்னலாடைகளுக்கான விலையை அதிகரித்து வாங்க வேண்டும்.

 அதே வேளையில், நூலுக்கான தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் நூற்பாலை சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் நூற்பாலை சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தட்டுப்பாடில்லாமல் நூல் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 தற்போது பருத்தி, நூலின் விலை அதிகரித்து வரும் சூழலில் நிதிநிலை அறிக்கையில் பருத்தி இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதித்துள்ளது பின்னலாடை உற்பத்திக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, பருத்தி இறக்குமதிக்கான வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.

இந்தியாவில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும் என்றால் அதன் ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும் என்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினம்.

 இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:   கரோனா நோய்த் தொற்றால் கடந்த ஆண்டு பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து பின்னலாடைகளுக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

 ஆனால் தற்போது பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூலின் விலையானது கடந்த 4 மாதங்களில் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரித்துள்ளது. இங்குள்ள நூற்பாலையினர் நூல்களைப் பதுக்கி செயற்கைத்  தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். மேலும், ஏற்றுமதிக்கு நல்ல விலை இருப்பதால் உள்நாட்டில் விற்பனை செய்யவும் தயங்குகின்றனர். 

பின்னலாடை உற்பத்தியைச் சார்ந்த நிட்டிங், பிரிண்டிங், டையிங், எம்பிராய்டரிங், காம்பேக்டிங் உள்ளிட்ட அனைத்து ஜாப் ஒர்க்குகளுக்கும் 20 சதவீதம் கட்டணம் உயர்ந்துள்ளது.

 இதன் காரணமாக போட்டி நாடுகளை சமாளிக்க முடியாமல், வெளிநாட்டு ஆர்டர்களை எடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 

 ஆகவே, விலை சீராகவும், தட்டுப்பாடின்றி கிடைக்கும் வரை நூல் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதுடன், பருத்தி இறக்குமதிக்கான வரியையும் ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் பின்னலாடைத் தொழிலை சரிவிலிருந்து மீட்க முடியும் என்றார்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com