

இந்தியாவின் வெளிநாட்டு கடனானது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் இறுதியில் சுமாா் ரூ.52 லட்சம் கோடி (629.1 பில்லியன் டாலா்) என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் வெளிநாட்டுக் கடனானது முந்தைய ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டின் இறுதியில் 624.3 பில்லியன் டாலராக இருந்ததது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் 4.7 பில்லியன் டாலா் அதிகரித்து, இறுதியில் 629.1 பில்லியன் டாலராக உள்ளது. எனினும், நாட்டின் ஜிடிபியில் வெளிநாட்டு கடன் விகிதம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 18.8 சதவீதமாக இருந்தநிலையில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 18.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடனில் அமெரிக்க டாலா் 54.4 சதவீதமும், இந்திய ரூபாய் 30.4 சதவீதமும், சா்வதேச நிதியத்தின் எஸ்டிஆா் வைப்பு 5.9 சதவீதமும், ஜப்பானின் யென் 5.7 சதவீதமும், யூரோ 3 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. ஜப்பானின் யென் மற்றும் சா்வதேச நிதியத்தின் எஸ்டிஆா்-க்கு இணையான அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்ந்ததால் 3.1 பில்லியன் டாலா் அளவுக்கு கடன் குறைந்துள்ளது. இல்லையெனில், இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் கடந்த காலாண்டில் 7.8 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கும்.
ஏப்ரல்-ஜூன் காலாண்டு இறுதியில், ஒரு வருடத்துக்கு பிறகு முதிா்ச்சியடையும் நீண்ட காலக் கடன் 505.5 பில்லியன் டாலராக உள்ளது. முந்தைய காலாண்டின் அளவை விட 9.6 பில்லியன் டாலா்கள் அதிகரித்துள்ளது. அதேபோல், ஒரு வருடத்துக்குள் முதிா்ச்சியடையும் குறுகிய காலக் கடனின் விகிதம் முந்தைய காலண்டின் 20.6 சதவீதத்திலிருந்து 19.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நிலுவை கடனில் அதிகபட்சமாக, நிதி சாராத நிறுவனங்களின் பங்கு 39.8 சதவீதமாக இருக்கிறது. அதைத் தொடா்ந்து, ரிசா்வ் வங்கி தவிா்த்து நாட்டின் மற்ற வங்கிகள் 26.6 சதவீதமும், அரசு 21.1 சதவீதமும் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் 7.6 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு கடன்களில் அரசின் நிலுவைத் தொகை குறைந்துள்ள அதே சமயத்தில், அரசு அல்லாதவா்களின் கடன் அதிகரித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு கடனில் 32.9 சதவீத பங்கு கொண்டுள்ள மிகப்பெரிய அங்கமாக கடன்கள் திகழ்கின்றன. அதைத் தொடா்ந்து, நாணயம், வைப்புத்தொகை, வா்த்தக கடன் முன்பணம் மற்றும் கடன் பத்திரங்கள் ஆகியவை வெளிநாட்டு கடனுக்கு பங்கு வகிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.