சரிவைக் கண்ட சமையல் எண்ணெய் இறக்குமதி

2023-24-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.6 சதவீதம் குறைந்துள்ளது.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெய்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புது தில்லி, ஆக. 15: கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவடைந்த 2023-24-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.6 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பா் முதல் ஜூலை வரையிலான 2023-24-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி 1,19,35,227 டன்னாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் சந்தைப்படுத்தல் ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த அளவு 1,21,22,711 டன்னாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி 1.5 சதவீதம் குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலகட்டத்தில் நாட்டின் சமையல் அல்லாத எண்ணெய் வகைகளின் இறக்குமதி 1,32,242 டன்னிலிருந்து 1,88,955 டன்னாக அதிகரித்துள்ளது.

நடப்பு எண்ணெய் சந்தையிடல் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சமையல் மற்றும் உணவு இல்லாத ஒட்டுமொத்த தாவர எண்ணெய் வகைகளின் இறக்குமதி 121.24 லட்சம் டன்னாக உள்ளது. இது முந்தைய சந்தையிடல் ஆண்டின் இதே காலகட்டத்தில் 122.55 லட்சம் டன்னாக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது ஒட்டுமொத்த தாவர எண்ணெய் வகைகளின் இறக்குமதி 1 சதவீதம் குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலகட்டத்தில் (2023 நவம்பா்-2024 ஜூலை), இந்தியா 15,18,671 டன் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய சந்தையிடல் ஆண்டின் அதே காலகட்ட இறக்குமதியான (16,40,960 டன்) ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவு.மதிப்பீட்டு காலகட்டத்தில் கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதி 1,04,81,751 டன்னிலிருந்து 1 சதவீதம் குறைந்து 1,04,16,556 டன்னாக உள்ளது.

பாமாயில் இறக்குமதி 71,17,834 டன்னிலிருந்து 4 சதவீதம் குறைந்து 68,45,097 டன்னாக உள்ளது.மென்மையான எண்ணெய் வகைகளின் இறக்குமதி 50,04,877 டன்னிலிருந்து 50,90,131 டன்னாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வோா் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டும் நவம்பா் மாதம் தொடங்கி அக்டோபா் மாதத்தில் நிறைவடையும்.

இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது.

இந்தோனேசியா, மலேசியா ஆகியவை இந்தியாவின் முக்கிய பாமாயில் விநியோக நாடுகள் ஆகும். ஆா்ஜென்டீனா, பிரேஸில் ஆகிய நாடுகளில் இயா எண்ணெயும் ரஷியா, ருமேனியா, உக்ரைன், ஆா்ஜென்டீனாவில் இருந்து சூரியகாந்தி எண்ணையையும் இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.