வாரத்தின் முதல் வணிக நாளான இன்று (நவ. 25) பங்குச் சந்தை உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் 992 புள்ளிகளும் நிஃப்டி 314 புள்ளிகளும் உயர்வுடன் இருந்தன.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 992.74 புள்ளிகள் உயர்ந்து 80,109.85 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.25 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 314.65 புள்ளிகள் உயர்ந்து 24,221.90 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.32 சதவீதம் உயர்வாகும்.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மூலதன மதிப்பு ரூ. 6 லட்சம் கோடி அதிகரித்து ரூ. 439.86 கோடியாக உயர்ந்துள்ளது.
24 நிறுவனப் பங்குகள் உயர்வு
வாரத்தின் முதல் வணிக நாளான இன்று சென்செக்ஸ் 1133 புள்ளிகள் உயர்ந்து 80,193.47 புள்ளிகளுடன் தொடங்கியது. இன்றைய அதிகபட்சமாக 80,473 புள்ளிகள் வரை சென்றது. எனினும் 79,765.99 என்ற இன்றைய அதிகபட்ச சரிவையும் பதிவு செய்தது. வணிக நேர முடிவில் 992 புள்ளிகள் உயர்ந்து 80,109 புள்ளிகளுடன் வணிகம் நிறைவு பெற்றது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள முதல் 30 தரப் பங்குகளில் 24 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 6 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.
அதிகபட்சமாக எல்&டி நிறுவனப் பங்குகள் 4.15% உயர்வுடன் இருந்தன. இதற்கு அடுத்தபடியாக எஸ்பிஐ 3.49%, அதானி போர்ட்ஸ் 2.65%, எச்.டி.எஃப்.சி. 2.30%, ஐசிஐசிஐ வங்கி 1.80%, பவர் கிரிட் 1.73%, ரிலையன்ஸ் 1.71% உயர்வுடன் இருந்தன.
இதேபோன்று ஜே.எஸ்.டபிள்யூ., ஸ்டீல் -2.47%, டெக் மஹிந்திரா -0.85%, இன்ஃபோசிஸ் -0.66%, ஏசியன் பெயின்ட்ஸ் -0.51%, எச்.சி.எல்., -0.36%, மாருதி சுசூகி -0.35% சரிவுடன் காணப்பட்டன.
ரூ. 6 லட்சம் கோடி உயர்வு
மும்பை பங்குச் சந்தையின் மத்தியத் தர நிறுவனங்கள் 1.6% உயர்ந்தன. சிறு, குறு நிறுவனங்கள் (ஸ்மால் கேப்) 2% வரை உயர்ந்திருந்தன.
பொதுத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை, ரியாலிdi துறை பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த மூலதன மதிப்பு ரூ. 6 லட்சம் கோடி அதிகரித்து ரூ. 439.86 கோடியாக உயர்ந்தது.
நிஃப்டி நிலவரம்
வணிக நேரத் தொடக்கத்தில் 24,253.55 புள்ளிகளுடன் நிஃப்டி தொடங்கியது. படிப்படியாக உயர்ந்து 24,351.55 புள்ளிகள் வரை சென்றது. வணிக நேர முடிவில் 314 உயர்ந்து 24,221 புள்ளிகளுடன் முடிந்தது.
நிஃப்டி பட்டியலில் உள்ள 50 தரப் பங்குகளில், பாலி மெடிகியூர், எல்ஜி எகியூப்மென்ட்ஸ், கில்லட் இந்தியா, திரிவேனி டர்பைன், ஐ.எஃப்.சி.ஐ., உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்வுடன் காணப்பட்டன.
அதானி கிரீன், விஜயா டையகனாஸ்டிக், கிரிசில், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி பவர், கேஸ்ட்ரால் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்திருந்தன.
உயர்வுக்கு காரணம் என்ன?
மாகாராஷ்டிர தேர்தல் முடிவுகள், பங்குச் சந்தை வணிக உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியதால், இந்திய பங்குச் சந்தை ஏற்றம் கண்டது.
மகாராஷ்டிரத்தில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.