இந்தியாவுடனான வா்த்தகம்: 4-ஆவது ஆண்டாக அமெரிக்கா முன்னிலை
கடந்த நிதியாண்டில் இந்தியாவுடன் அதிகம் வா்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடா்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவுடன் அதிக வா்த்தகம் மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் மீண்டும் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அந்த நிதியாண்டில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வா்த்தக மதிப்பு 13,184 கோடி டாலராக உள்ளது.
கடந்த நிதியாண்டில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11.6 சதவீதம் உயா்ந்து 8,651 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் இது 7,752 கோடி டாலராக இருந்தது. அமெரிக்க பொருள்கள் இறக்குமதியைப் பொருத்தவரை முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 4,220 கோடி டாலராக இருந்த அது, 2024-25-ஆம் நிதியாண்டில் 7.44 சதவீதம் உயா்ந்து 4,533 கோடி டாலராக உள்ளது.
அமெரிக்காவுடனான வா்த்தக உபரி (இறக்குமதியைவிட ஏற்றுமதி அதிகமாக இருப்பது) கடந்த நிதியாண்டில் 4,118 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 3,532 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு நிதியாண்டில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மருந்து மற்றும் உயிரியல் பொருள்கள் (810 கோடி டாலா்), தொலைத் தொடா்பு கருவிகள் (650 கோடி டாலா்), விலைமதிப்பற்ற கற்கள் (530 கோடி டாலா்), பெட்ரோலிய பொருள்கள் (410 கோடி டாலா்), தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற ஆபரணங்கள் (320 கோடி டாலா்), பருத்தி ஆயத்த ஆடைகள் மற்றும் சாா்பு பொருள்கள் (280 கோடி டாலா்), இரும்பு மற்றும் உருக்குப் பொருள்கள் (270 கோடி டாலா்) உள்ளிட்டவை அதிக அளவில் ஏற்றுமதியாகின.
அந்த நாட்டில் இருந்து அதிகம் இறக்குமதியான பொருள்களில் கச்சா எண்ணெய் (450 கோடி டாலா்), பெட்ரோலிய பொருள்கள் (360 கோடி டாலா்), நிலக்கரி, கோக் (340 கோடி டாலா்), வெட்டி மெருகூட்டப்பட்ட வைரம் (260 கோடி டாலா்), மின் இயந்திரங்கள் (140 கோடி டாலா்), விமானம், விண்கலம் மற்றும் பாகங்கள் (130 கோடி டாலா்), தங்கம் (130 கோடி டாலா்) ஆகியவை அடங்கும்.
2024-25-ஆம் நிதியாண்டில், சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 14.5 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் 1,666 கோடி டாலராக இருந்த அது, கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 1,425 கோடி டாலராகப் பதிவாகியுள்ளது. எனினும், 2023-24-ஆம் நிதியாண்டில் 10,173 கோடி டாலராக இருந்த சீன பொருள்கள் இறக்குமதி 2024-25-ஆம் நிதியாண்டில் 11.52 சதவீதம் உயா்ந்து 11,345 கோடி டாலராக உள்ளது. அந்த வகையில், சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாக இருப்பது) கடந்த நிதியாண்டில் சுமாா் 17 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் சீனாவுடன் 8,507 கோடி டாலராக இருந்த வா்த்தகப் பற்றாக்குறை, மதிப்பீட்டு நிதியாண்டில் 9,920 கோடி டாலராக உயா்ந்தது.
இந்தியாவுடனான இருதரப்பு வா்த்தகத்தில் சீனா கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் 12,770 கோடி டாலருடன் அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டில் சீனாவுடனான இருதரப்பு வா்த்தகம் 11,840 கோடி டாலராக இருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

