

மும்பை: வளர்ச்சியை ஆதரிப்பது, பணப்புழக்கத்தை மேம்படுத்துவது குறித்து, ரெப்போ விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைப்பதாக ரிசர்வ் வங்கியின் முடிவு செய்ததையடுத்து பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்ந்து முடிவடைந்தன.
இந்திய சந்தைகள் ரிசர்வ் வங்கியின் எதிர்பாராத 25 அடிப்படை புள்ளிகள் விகிதக் குறைப்புக்கு உற்சாகமாக பதிலளித்துள்ள நிலையில், இன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக சென்செக்ஸ் 531.4 புள்ளிகள் உயர்ந்து 85,796.72 புள்ளிகளாக இருந்தது.
வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 447.05 உயர்ந்து 85,712.37 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 152.70 புள்ளிகள் உயர்ந்து 26,186.45 புள்ளிகளாக நிலைபெற்றது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது, ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% குறைக்க ஒருமனதாக வாக்களித்தது நடுநிலையான நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டது. இவ்வாறு செய்ததன் மூலம், டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 90 டாலர்களைத் கடந்த நிலையில், அதன் மதிப்பு வீழ்ச்சி குறித்த கவலைகளை ரிசர்வ் வங்கி புறக்கணித்தது.
மார்ச் வரையிலான நிதியாண்டிற்கான பணவீக்க கணிப்பை ரிசர்வ் வங்கி 2.6 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாகக் குறைத்தது. அதே நேரத்தில் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.8 சதவிகிதத்திலிருந்து 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
சென்செக்ஸில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி, எச்.சி.எல் டெக், லார்சன் & டூப்ரோ, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை உயர்ந்தும் அதே வேழையில் இந்துஸ்தான் யூனிலீவர், எடர்னல், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் மற்றும் சன் பார்மா ஆகியவை சரிந்து முடிவடைந்தன.
தொடர்ந்து 7-வது நாளாக இழப்புகளை நீட்டித்து வந்த இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்தின் பங்குகள் 2% க்கும் மேலாக சரிந்து ரூ.133.5 ஆக முடிவடைந்தன. இந்த வீழ்ச்சியுடன், அரசு நடத்தும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிதியாளரின் பங்குகள் ஜூலை 2024ல் அதன் அனைத்து நேர உயர்வான ரூ.310 இருந்து 58% சரிவு.
இக்ளெர்க்ஸ் சர்வீசஸ் லிமிடெட் தனது பங்குகளை திரும்பப் பெறுவதற்கான தேதி டிசம்பர் 17 என்று நிர்ணயித்தது. பங்குகளை திரும்பப் பெற டிசம்பர் 22 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 29 ஆம் தேதி முடிவடையும் என்றது நிறுவனம்.
கெய்ன்ஸ் டெக்னாலஜி இந்தியாவின் பங்குகள் 8% அதிகமாக சரிவுடன் நிறைவடைந்த நிலையில், பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2% க்கும் மேலாக உயர்ந்து அதன் இன்றைய அதிகபட்ச விலையான ரூ.1,693.80 தொட்டது.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் கிட்டத்தட்ட 6% சரிந்து இன்றைய குறைந்தபட்ச விலையான ரூ.2,286.70 ஆக முடிவடைந்தது. மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியமானது மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.500 கோடி வரை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளதாகக் தெரிவித்துள்ளது.
விகிதக் குறைப்பு முடிவிற்குப் பிறகு நிஃப்டி ஃபைனான்சியல் சர்வீசஸ் 0.8% உயர்ந்தன. அதே நேரத்தில் பேங்க் நிஃப்டி மற்றும் பொதுத்துறை நிறுவனம் வங்கி குறியீடு முறையே 0.5% மற்றும் 1% உயர்ந்தன.
வங்கி, ஆட்டோ மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.1,944.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.3,661.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகியவை உயர்ந்தும், அதே நேரத்தில் ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) சமமாக முடிவடைந்தன.
இதையும் படிக்க: குறைந்தது கோல் இந்தியா உற்பத்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.