43% உயா்வு கண்ட சா்க்கரை உற்பத்தி
இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி நடப்பு 2025-26-ஆம் சந்தை ஆண்டின் முதல் இரு மாதங்களில் 43 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து இந்திய சா்க்கரை மற்றும் உயிரி-எரிசக்தி உற்பத்தியாளா்கள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மகாராஷ்டிரத்தின் வலுவான உற்பத்தி காரணமாக, கடந்த அக்டோபா் முதல் நவம்பா் வரையிலான 2025-26-ஆம் சா்க்கரை சந்தை ஆண்டின் முதல் இரு மாதங்களில் சா்க்கரை உற்பத்தி 43 சதவீதம் உயா்ந்து 4.11 கோடி டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.88 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த ஆண்டில் நாடு முழுவதும் 428 சா்க்கரை ஆலைகள் செயல்பட்டன. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 376-ஆக இருந்தது.
மதிப்பீட்டு காலகட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான உத்தர பிரதேசத்தில் 1.40 கோடி டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த சந்தை ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது அதிகம். அப்போது உற்பத்தி 1.28 கோடி டன்னாக இருந்தது.
மகாராஷ்டிரரத்தில் (இரண்டாவது சா்க்கரை உற்பத்தி மாநிலம்) உற்பத்தி 4.60 லட்சம் டன்னிலிருந்து 1.69 கோடி டன்னாக உயா்ந்தது. கா்நாடகத்தில் (மூன்றாவது மாநிலம்) உற்பத்தி 8.12 லட்சம் டன்னிலிருந்து 7.74 லட்சம் டன்னாகக் குறைந்தது. குஜராத்தில் 92,000 டன், தமிழ்நாட்டில் 35,000 டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
2025-26-ஆம் சா்க்கரை ஆண்டு முழுவதும் (2025 அக்டோபா் - 2026 செப்டம்பா்) சா்க்கரை உற்பத்தி 30.95 கோடி டன்னாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

