
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (மார்ச் 5) 19 காசுகள் உயர்ந்து ரூ. 87 காசுகளாக நிறைவு பெற்றது.
நேற்றைய வணிகநேர முடிவில் 13 காசுகள் உயர்ந்து ரூ. 87.19 காசுகளாக இருந்த நிலையில், இன்று 19 காசுகள் உயர்ந்துள்ளது. கடந்த மூன்று வாரங்களில், அதாவது பிப்ரவரி 11க்கு பிறகு ரூபாய் மதிப்பு 65 காசுகள் வரை உயர்ந்துள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று 14 காசுகள் சரிந்து ரூ. 87.18 காசுகளாக வணிகம் தொடங்கியது. பின்னர் படிப்படியாக மதிப்பு உயர்ந்து அதிகபட்சமாக ரூ. 86.93 காசுகள் வரை உயர்ந்தது. பின்னர் படிப்படியாக சரிந்து அதிகபட்சமாக ரூ. 87.20 காசுகள் வரை சரிந்தது.
வணிக நேர முடிவில் 19 காசுகள் உயர்ந்து ரூ. 87 காசுகளாக நிறைவு பெற்றது. இது நேற்றைய ரூபாய் மதிப்புடன் ஒப்பிடுகையில், 81 காசுகள் உயர்வாகும்.
ரூபாய் மதிப்பு உயரக் காரணம்
தொடர்ந்து வெளிநாட்டு நிதி வெளியேற்றம் நடந்துகொண்டிருந்த சூழலில், இன்று உள்ளூர் முதலீடுகள் அதிகரித்ததே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு காரணமாக நிபுணர்கள் கருதுகின்றனர். நேற்றைய நிலவரப்படி ரூ. 3,405 கோடி பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். இதேவேளையில் உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 4,851 கோடி முதலீடு செய்துள்ளனர்.
பங்குச் சந்தை நிலவரம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.30 புள்ளிகள் உயர்ந்து 73,730.23 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 1.01 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 254.65 புள்ளிகள் உயர்ந்து 22,337.30 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 1.15 சதவீதம் உயர்வாகும்.
ஐடி, ஆட்டோ, மெட்டல், பொதுத் துறை, ரியாலிடி துறை பங்குகள் 2 - 4 சதவீதம் வரை ஏற்றத்துடன் காணப்பட்டன.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?