சொமாட்டோ நிறுவனத்தின் பெயரை 'ஈடர்னல்' என மாற்ற அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் சொமாட்டோவின் பெயரை மாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவைத் தலைமையிடமாகக் கொண்டு உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுவரும் சொமாட்டோ நிறுவனம் தனது பெயரை ஈடர்னல் (Eternal) என மாற்றியுள்ளது.
சொமாட்டோ நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக இப்பெயர் மாற்றம் தொடர்பான அறிவித்திருந்தது.
ஏராளமான பங்குதாரர்கள் சொமாட்டோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால் அவர்களில் ஒப்புதலுக்காகவும் சொமாட்டோ நிறுவனம் காத்திருந்தது.
பெயர் மாற்றம் தொடர்பான பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக பிப்ரவரி 6 மற்றும் 7 ஆம் தேதி கடிதங்களையும் பெயர் மாற்றம் தொடர்பான ஆவணங்களையும் சொமாட்டோ அனுப்பியது.
இந்தப் பெயர் மாற்றம் செயலிக்கு அல்ல, நிர்வாக மேம்பாட்டிற்கு மட்டுமே என பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், வாக்குகளின் அடிப்படையில் பெயர் மாற்றம் குறித்து பங்குதாரர்களின் கருத்துகள் பெறப்பட்டன. இதில் பெரும்பாலான பங்குதாரர்கள் பெயர் மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, பெயர் மாற்றமானது நிறுவனத்தின் சட்ட ஆவணங்களிலும், நிறுவன விதிகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
பங்குச் சந்தையில் சொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 22% சரிந்துள்ளது. இன்று மட்டும் 4.5% வரை சரிவைச் சந்தித்துள்ளது.
இதையும் படிக்க | சீனா, ஜப்பான் ரசாயனப் பொருள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி