இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 3,000 புள்ளிகள் உயர்வு!

சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகளாகவும் நிஃப்டி 916.70 புள்ளிகள் உயர்ந்து 24,924.70 புள்ளிகளாக நிலைபெற்றது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: சென்செக்ஸ் அதிரடியாக 3,000 புள்ளிகள் உயர்வு!
Published on
Updated on
2 min read

மும்பை: இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் எதிரொலியாக சென்செக்ஸ் அதிரடியாக சுமார் 3,000 புள்ளிகள் வரை உயர்ந்து வர்த்தகமானது.

நிலம், வான் மற்றும் கடல் உள்ளிட்ட பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த இந்தியாவும் - பாகிஸ்தானும் ஒரு உடன்பாட்டை எட்டியதையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆரம்ப வர்த்தகத்தில் வெகுவாக மீண்டு வர்த்தகமானது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழிக்க இந்தியா மே 7 ஆம் தேதி தொடக்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது நினைவிருக்கும்.

இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,793.73 புள்ளிகள் உயர்ந்து 81,248.20 புள்ளிகளாகவும் நிஃப்டி 553.25 புள்ளிகள் உயர்ந்து 24,561.25 ஆக இருந்தது. பிறகு சற்று முன்னோக்கி சென்று மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 1,949.62 புள்ளிகள் உயர்ந்து 81,398.91 ஆகவும், நிஃப்டி 598.90 புள்ளிகள் உயர்ந்து 24,606.90 ஆகவும் வர்த்தகமானது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,975.43 புள்ளிகளாகவும் நிஃப்டி 916.70 புள்ளிகள் உயர்ந்து 24,924.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

இந்தியா - பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இன்றைய ஆரம்ப வர்த்தகங்களில் நிஃப்டி குறியீட்டு மிகப்பெரிய மீட்சியைத் கண்டது. அதே வேளையில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான ஆக்கபூர்வமான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் உலகளாவிய உணர்வை மேலும் வலுப்படுத்தியது. நாளை அல்லது நாளை மறுநாள் வெளியிடப்படும் முக்கிய உள்நாட்டு பணவீக்க எண்கள் குறித்த கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் மற்றும் என்டிபிசி ஆகியவை உயர்ந்து முடிந்த நிலையில் சன் பார்மா 5 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது.

சதவிகித அடிப்படையில், இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு கிட்டத்தட்ட 4 சதவிகிதம் உயர்ந்து. இது கடந்த 4 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அதிகபட்ச லாபத்தைப் பதிவு செய்தது.

நிஃப்டி ரியாலிட்டி மற்றும் நிஃப்டி ஐடி துறை குறியீடுகள் 6 அல்லது 7% வரை உயர்ந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் சிறப்பாக செயல்பட்டு 4.1 சதவிகிதம் வரை உயர்ந்தது.

அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பர கட்டணங்களில் 90 நாள் இடைநிறுத்தம் ஒப்பந்தம் மற்றும் இஸ்தான்புல்லில் ரஷ்யாவும் உக்ரைனும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதாக வெளியான தகவல்கள் உலகளாவிய கவலைகளைத் தணித்தது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடந்த நிலையில், ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு சரிவுடன் முடிந்தது. கடந்த வாரம் (வெள்ளிக்கிழமை) அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிந்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.52 சதவிகிதம் உயர்ந்து 64.24 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.3,798.71 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com