மகாராஷ்டிரத்தில் அதானி குழுமம் ரூ.6 லட்சம் கோடி முதலீடு
மகாராஷ்டித்தின் தொழில் வளா்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு பங்களிக்கும் வகையில், வரும் ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் ரூ.6.04 லட்சம் கோடியை அதானி குழுமம் முதலீடு செய்யவுள்ளது.
ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் 56-ஆவது உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில் புதன்கிழமை இதுகுறித்த அறிவிப்பு வெளியானது.
அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள இந்த முதலீடுகள், விமானப் போக்குவரத்து, தூய்மை எரிசக்தி, எண்மத் தளங்கள், நவீன உற்பத்தி ஆகிய துறைகளில் கவனம் செலுத்தும் என்று அதானி குழும இயக்குநா் பிரணவ் அதானி தெரிவித்தாா்.
இந்த முதலீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி மறுசீரமைக்கப்படும். மேலும், கடந்த மாதம் செயல்பாட்டுக்கு வந்த நவி மும்பை சா்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஒரு பெரிய வணிக மற்றும் சரக்குப் போக்குவரத்து மையம் மேம்படுத்தப்படும்.
3,000 மெகாவாட் திறன் கொண்ட தரவு மைய பூங்காக்கள், 8,700 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நீா்மின் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படவுள்ளது. இத்துடன் செமிகண்டக்டா் மற்றும் ‘டிஸ்ப்ளே ஃபேப்ரிகேஷன்’ மையங்களைத் தொடங்கவும் அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
முதலீடுகளை வரவேற்றுப் பேசிய மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், ‘அதானி குழுமம் மட்டுமின்றி, மாநிலத்துக்கு முதலீடுகளைக் கொண்டு வரும் எந்தவொரு நிறுவனத்தையும் நாங்கள் வரவேற்கிறோம். முதலீடுகள் இன்றி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது’ என்றாா்.

