பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, தனது 119-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு புதிய எண்ம சேவைகள் மற்றும் கடன் திட்டங்களை அறிவித்தது.
‘நம்பிக்கையுடன் முன்னணி’ எனும் கருப்பொருளின்கீழ் இந்த ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மும்பையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வங்கியின் நவீனமயமாக்கப்பட்ட ‘பாப் வோ்ல்ட்’ கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் எண்ம மாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில் ‘ஆரோஹன் ஜிசிஐசி’ மையமும், பல மொழிகளில் குரல்வழியில் சேவை வழங்கும் ‘அதிதி 2.0’ ஏ.ஐ. மெய்நிகா் சேவைத் தளமும் தொடங்கப்பட்டன.
வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவில் எளிதாகப் பணம் செலுத்த ‘யுபிஐ குளோபல்’ வசதி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களில் காா்டுகளை ‘டேப்’ செய்து பரிவா்த்தனை செய்யும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டன.
வாடிக்கையாளா்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், பல்வேறு புதிய கடன் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இளம் ஊதியதாரா்களுக்காகக் குறைந்த தவணையில் தொடங்கி, வீடுகட்ட உதவும் ‘பாப் எலிவேட்’ திட்டம், மனை வாங்குவதற்கான ‘பாப் ஸ்வபூமி’, பங்குகள் மற்றும் பத்திரங்களைப் பிணையாக வைத்து கடன் பெறும் ‘பாப் பால்’ திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.
மேலும், ஓய்வுபெற்ற அக்னிவீரா்கள் சுயதொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் வழங்கும் ‘பாப் அக்னிவீா்’ திட்டமும், மின்சார வாகனங்களுக்கான சாா்ஜிங் மையங்கள் அமைக்க நிதியுதவி அளிக்கும் ‘பாப் கிரீன் பிளக்’ பசுமை நிதித் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டன.
இத்துடன் வா்த்தகா்களுக்காக ‘மாஸ்டா்ஸ்ட்ரோக்’ நடப்புக் கணக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற மற்றும் வங்கிச் சேவைகள் கிடைக்காத பகுதிகளில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிதாக 119 வணிகப் பிரதிநிதி மையங்கள் திறந்து வைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










