கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாத்தானும் பொன் விதியும்

மனஅதிர்ச்சியூட்டும் சோக நிகழ்வுகள், தனிமனித மனத்தின் 'நான்' என்கிற உணர்வுக்கு முன் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கின்றன. ஒரு திடீர் விபத்தில் கணவனை இழந்து நிற்கும் மனைவியின் முன், மரணம் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கிறது.

News image
Updated On :3 ஏப்ரல் 2016, 4:42 am

அரவிந்தன் நீலகண்டன் / சாந்தினிதேவி ராமசாமி

2014, டிசம்பரில், பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் அந்நாட்டு ராணுவத்தினரின் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் கொல்லப்பட்ட 141 பேரில் 132 பேர் அந்தப் பள்ளியில் பயிலும் குழந்தைகள். அண்மையில், அதற்கு இணையாக நடந்த மற்றொரு படுகொலை, இந்த ஈஸ்டர் நாள் அன்று குழந்தைகள் பூங்கா ஒன்றில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல். 2002-ல், குஜராத்தில் அக்க்ஷர்தாம் மையம் தாக்கப்பட்டபோது, குறிப்பாக அங்கே பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர்.

Story image

குழந்தைகளைக் கொல்லும் அளவுக்கு நம்மை கொடூரமாக இதயமிழக்க வைக்கும் சக்தி எது? மதமும் சித்தாந்தமும் இதைச் செய்ய வல்லவை. மதப் போர்கள், மதக் கலவரங்கள் ஆகியவையும், சித்தாந்த வெறியும் மானுட வரலாற்றின் மிக மோசமான படுகொலைகளைச் செய்ய வைத்திருக்கின்றன.

Story image

சித்தாந்தம் என்பதும் அடிப்படையில் மத நம்பிக்கையே. உலகின் மிகப்பெரிய படுகொலைகளைச் செய்த அரசியல் சித்தாந்தம் இறை நம்பிக்கை அற்றதாக இருந்தபோதிலும், அது மத நம்பிக்கையாகவே செயல்பட்டது. மத நம்பிக்கைகளுக்குக் கொல்லும் கொடூரம் ஏன் இருக்கிறது என்பதுதான் கேள்வி.

Story image

மானுட கூட்டு பரிணாமத்தில், பண்பாடு ஒரு முக்கியமான அமைப்பு. நம் பண்பாடு என்பது பொதுவாக அதீதமான தனிமனித தியாகங்களால் உருவானதாக இருக்கிறது. நமது ஒட்டுமொத்த மானுட பண்பாட்டை உருவாக்கிய பிதாமகர்கள், பெரும்பாலும் தனிமைவாசிகள். தங்கள் வம்சாவளியை பெரிதாக விருத்தி செய்தவர்கள் அல்ல. ஒரு உயிரியின் பரிணாம வெற்றி, அது எந்த அளவு தன் மரபணுக்களைச் சுமக்கும் வாரிசுகளை உருவாக்குவதில் இருக்கிறது என்பது அடிப்படை பாடம். ஆனால், நம் மானுட உயிரினத்தின் பரிணாம வெற்றி, அதன் பண்பாட்டுப் பரிணாமத்தில் இருக்கிறது. நம் பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியோ, கூட்டு பரிணாம வளர்ச்சி. அதனை உருவாக்கியவர்கள், தம் உயிரியல் மரபணு சந்ததிகள் குறித்துப் பெரிதும் கவலைப்படவில்லை.

இத்தகைய பண்பாட்டுப் பிதாமகர்கள், சில நெறிமுறைகளை ஏற்படுத்தியதுடன், அதற்கு, சமய வேர்களையும் அளித்தார்கள்.

சமயத்தின் வேர்கள் ஆழமாக வேர்பிடித்து நிற்கும் மண், மரண அச்சம்தான். இறப்பு பெரும் சோகம். அது இலட்சிய முனைப்புடன் வாழும் தனிமனிதனின் வாழ்வை அர்த்தமற்றதாக்கும் நிச்சயத்தன்மை கொண்டது, மரணம். ஆனால், மரணம் தாண்டிய ஒரு அமரத்தன்மையை அளிப்பது எது? தன் புலன்களால் அனுபவிக்கும் அன்றாட அனுபவங்களைத் தாண்டிய ஒரு அனுபவம் மூலமாகவே அமரத்தன்மை குறித்த ஒரு வேட்கையை மனிதன் பெறுகிறான். இதை 'தன்னைக் கடந்ததோர் பிரபஞ்சம் தழுவிய அனுபவம்' எனக் கூறலாம்.

மரணத்தை வெல்லும் சமயம்

மானுட பண்பாட்டின் வளர்ச்சிக்குத் தனிமனிதன் ஒருவன் தன்னை மீறி தன் சுயநலத்தை மீறி ஏன் பங்களிக்க வேண்டும்? பரிணாமம் இதற்கு உருவாக்கிய ஒரு விடை, தனிமனித சமய அனுபவங்கள். இந்தச் சமய அனுபவங்கள், மானுட மூளையின் நரம்பியலில் சாத்தியங்களாக உள்ளிருக்கின்றன. அவை சிலருக்கு ஏற்படும்போது, அவர்களை அந்த இறை அனுபவங்கள் பெரும் செயல்களைச் செய்விக்கின்றன. மிகச்சிறந்த மனங்களின் உந்துசக்தியாக இது விளங்குகிறது. ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாழ்வில் இந்தச் சமய உணர்வு, பிரபஞ்சத்தை தன் சமன்பாடுகள் மூலமாகப் பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிந்துணரும் முயற்சியாகிறது. அதேசமயம், ஒரு சாதாரண மனிதனுக்குச் சிறிய சட்டகங்களுள் வெளிப்படும் சமய உணர்வு, தன் வாழ்வின் துக்கங்களை எதிர்கொள்ளும் ஓர் அதிர்வுகளை உறிஞ்சும் கருவியாகிறது.

Story image

கார்ல் யுங் உருவாக்கிய உளவியல் பாரம்பரியத்தைச் சார்ந்த உளவியலாளர் கிரென் மொஹென்சன் (Gren Mogenson), 'கடவுள் ஒரு சோக மனஅதிர்ச்சி' (God is a Trauma) எனும் நூலில், சுவாரசியமான ஆனால் முக்கியமான ஒரு பார்வையை முன்வைக்கிறார். மனஅதிர்ச்சியூட்டும் சோக நிகழ்வுகள், தனிமனித மனத்தின் 'நான்' என்கிற உணர்வுக்கு முன் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கின்றன. ஒரு திடீர் விபத்தில் கணவனை இழந்து நிற்கும் மனைவியின் முன், மரணம் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கிறது. இப்பிரம்மாண்டத்தின் முன் நிற்கும் கையறு நிலைக்கும், பக்தனின் மனம் தன் இறைவனின் பிரம்மாண்டத்தின் முன் கொள்ளும் பயம் நிறைந்த பக்திக்கும் இணைத்தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார் மொஹென்சன்.

இதை விளக்க, யூத திருமறையில் வரும் யோபுவின் சரிதத்தை மொஹென்சன் பயன்படுத்துகிறார். யோபு, இறைபக்தி கொண்ட நல்ல மனிதன். அவன் தன்வாழ்வு திடீரென சிதைந்து அழிவதைக் காண்கிறான். தெய்வம் அவனை சோதனைக்கு உள்ளாக்குகிறது. வாழ்க்கையில் அனைத்தையும் இழந்து நிற்கிறான் யோபு. யஹீவா தெய்வம், யோபுவின் வாழ்க்கையுடன் நடத்தும் விளையாட்டு, ஏறக்குறைய பூனை தன் இரையான எலியுடன் நடத்தும் விளையாட்டைப்போல் உள்ளதாக யுங் குறிப்பிடுகிறார். யஹீவா உருவாக்கும் இந்தப் பிரம்மாண்ட சோக அதிர்ச்சிகளின் முன் தன்னை ஏதுமிலியாக, அற்பனாக உணர்கிறான் யோபு. (தமிழ் விவிலியத்தில் தன்னை அவன் ‘நீசன்’ எனச் சொல்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், யூத திருமறையில் பயன்படுத்தப்படும் பதம் kal·lo·ti என்பது. இதன் பொருள், எவ்வித முக்கியத்துவமும் இல்லாத அற்பன் என்பதாகும்). இவ்வுணர்தலே அவன் மீட்பும்கூட.

Story image

இங்கு, இறைவன் என்பதை நம்மைத் தாண்டிய ஒரு சக்தியாக, ஆற்றலாக கார்ல் யுங்கும் மொஹென்சனும் காணவில்லை. நம் அக-அமைப்பில் இருக்கும் ஒரு அம்சமாக மொஹென்சன் காண்கிறார். அது என்ன? நம் துக்க பேரதிர்வுகளின் பிரம்மாண்டத்தின் மற்றொரு இணையான ஒன்று. அவ்விதத்தில், நம் துக்க பேரதிர்ச்சிகளிலிருந்து மீள நமக்குக் கிடைக்கும் ஒரு ஆழமான உளவியல் தகவமைப்பு (deep psychological adaptation), கார்ல் உங், யோபுவுக்கு யஹீவா ஏற்படுத்திய வேதனைகளை இன்னும் ஒரு படி அதிகமாகச் சென்று காண்கிறார். மானுடம் உணரும் வேதனைகள், சந்திக்கும் அழிவுகள் அனைத்தும் இறைவனின் இருட்செயல்கள் என மானுட அகம் உணர்கிறது.

Story image

இங்கு இறைவன் என்பது பெரும் சோக அதிர்ச்சிகள் உருவாக்கும் பிரம்மாண்டத்தின் உளவியல் படிமம்.

யூத திருமறையின் யோபுவுக்கு இணையாக இந்தியச் சூழலில் உடனடியாக நினைவுக்கு வருவது ஹரிச்சந்திரன்தான். ஆனால், அது ஒரு மேலோட்டமான ஒற்றுமைதான். உண்மையில், யோபு உருவாக்கும் கேள்விக்கும், யோபு தரிசிக்கும் இறை ஆற்றலின் பிரம்மாண்டத்துக்கும் இணையான ஒரு தருணம், பகவத் கீதையில் அர்ஜுனனால் தரிசிக்கப்படுகிறது. பகவத் கீதையில், விஸ்வரூப தரிசனம் அர்ஜுனன் மனத்தில் பிரமிப்பைவிட அச்சத்தையே பெரிதும் தூண்டியது. காலத்தின் துரிதகதியில், பேரழிவினை அவன் காண்கிறான். இந்த இறைவனின் முழுமையான பிரபஞ்ச ஆளுமையின் தரிசனத்தைக் கண்ட அர்ஜுனன், அது தன் கண்களின் முன்னிருந்து மறைந்துபோவதையே விரும்புகிறான்.

Story image

இந்த மதக் கோட்பாடுகள் அனைத்திலும் இருப்பது என்ன? மானுடம் தான் சந்திக்கும் மரணம் அல்லது பெரும் சோகப் பேரதிர்ச்சிகளிலிருந்து வெளிவர வேண்டும். தனிமனிதனாக மட்டுமல்ல, ஒரு சமுதாயமாகவும் வெளிவர வேண்டும். வந்து இயங்க வேண்டும். அதற்கான சக்தியை மத தரிசனங்கள் அளிக்கின்றன. இவை மூலமாகவே, பெரும்பாலான மானுடர்கள் தங்கள் தனிப்பட்ட சோகங்களிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கும் மானுட சமுதாயங்கள் பெரும்பாலும் மீண்டு வந்திருக்கின்றன.

இப்படி, மானுட தனி வாழ்க்கையையும் மானுட கூட்டுப் பரிமாணத்தையும் மிகக் கச்சிதமாக ஆயிரமாயிரம் ஆண்டுகள் தலைமுறை தலைமுறையாக வாழவைக்கும் சமயத்துக்கு ஒரு இருண்ட நிழல் இருக்கிறது.

மனிதன், இயற்கையுடனும் சக மனிதர்களுடனும் எப்படி உறவுகொள்கிறான் என்பதை சமய நெறிகள் தீர்மானிக்கின்றன. மானுடப் பண்பாடுகள் தனித்தனியாக பரிணாம வளர்ச்சி அடையும்போது, ஒரு குறிப்பிட்ட நெறிமுறை கொண்டவர்கள் தம்மை உயர்வாக உணர்ந்தார்கள். அவர்கள், நம்மவர்கள் மட்டுமே பல்கிப் பெருகி பூமியை நிரப்ப விதி கொண்டவர்கள் எனக் கருதினார்கள். தம் நெறிமுறைகளை ஏற்றவர்களின் மரபணு சந்ததிகள் மட்டுமே பல்கிப் பெருக வேண்டும் என்பது இதன் அடிப்படை அவா.

இதற்காக, தனி மனிதர்கள் சிலராவது தங்களது முழு வாழ்நாளையும் அர்ப்பணிக்க வேண்டும். எனவே, ஒரு சமய தரிசனத்துக்காக தம் வாழ்நாளையே அர்ப்பணம் செய்து வாழும் துறவிகள் அமைப்பை சமயங்கள் உருவாக்கின. மற்றொரு பக்கம், அரசு இயந்திரத்தின் உதவியுடன் ஒரு குறிப்பிட்ட சமயத்துக்காகப் பிற சமயத்தவரை ஒழித்தல் என்பதையும் சமயங்கள் கைக் கொண்டன. இப்போது, படுகொலைகளையும் பிறரை அழித்தொழித்தலையும் மதங்கள் நியாயப்படுத்தவேண்டி இருந்தன.

ஏனெனில், அடிப்படை ஆதாரமான உயிர்வாழும் இச்சையின் நரம்பியக்கங்களிலிருந்து சமயம் உருவாகிறது. மரணம் உருவாக்கும் பொருளற்ற நிலையிலிருந்து மானுடனை மீட்ட சமயமே படுகொலைகளை எளிதாகச் செய்யும் கட்டற்ற மன இறுக்கத்தை மானுடத்துக்கு வழங்கியது ஒரு பரிணாம முரண்நகை.

இயற்கை வளங்கள் குறைவாக இருக்கும் நம் பூமியில், ஒரு குறிப்பிட்ட பண்பாடு - சமயப் பார்வை கொண்டவர்கள், பிற பண்பாடு - சமய பார்வை கொண்டவர்களைத் தம் போட்டியாளராகக் கருதுவது இயற்கையே. எனவே, இறையியல் சித்தாந்தங்கள் மூலம் பிறரைத் தன்னில் இருந்து அந்நியராகக் காட்டும்போது, அவர்களை அழித்து இயற்கை வளங்களில் ‘தம்மவருக்கு’ அதிகப் பகிர்தலை அளிப்பது தேவையாகிறது. இதை ஒருவிதத்தில் சமயம் சார்ந்த மால்த்யூசிய பார்வை என்றுகூட சொல்லலாம். 

சாத்தான் ஏன் தேவை?

பண்டைய பாரசீகத்தில் உருவான ஜராதுஷ்ட்ர மதம், நம்மவர் - தெய்வ மதத்தினர்; மற்றார் – தீய மதத்தினர் எனும் இருமையை அளித்தது.  உலக வரலாற்றை அஹுராமஸ்தா எனும் ஒளிமயமான நல்ல தெய்வத்துக்கும் அஹ்ரிமான் என்கிற தீய இருண்ட சக்திக்குமான போராட்டமாக உருவகித்தது. பின்னாட்களில், யூத சமய குறுங்குழுக்களில் இந்த இருமைப்பார்வை பரவியது. யூத மைய இறையியலில் இந்த இருமை இடம் பிடிக்காவிட்டாலும், சாத்தான் என்கிற எதிரி செயல்படுவதாக யூத திருமறை ஆங்காங்கே பேசுகிறது. யோபுவை சோதிப்பதிலும் சாத்தானுக்கு ஒரு பங்கு உண்டு. ஆண்டவன் அனுமதித்த பங்கு அது. கிறிஸ்தவம் உருவாகி வந்தபோது, சைத்தான் எனும் இறை எதிரி ஒரு முக்கியப் பங்கினை அந்த இறையியலில் வகிக்கலானான்.

Story image

சமய வரலாற்று ஆராய்ச்சியாளரான எலைன் பேகல்ஸ், சைத்தானின் சமுதாயப் பங்கினை விவரிக்கிறார். பாகனீய எதிர்ப்பாளர்கள், இதர கிறிஸ்தவ சமயக் குழுக்கள் ஆகியவை, 'சாத்தானின் ஊழியக்காரர்களாக’க் கண்டுகொள்ளப்பட்டார்கள் என்கிறார் அவர். பின்னாட்களில், ஒவ்வொரு சபையினரும் பிற சபையினரை ‘சாத்தானின் கையாட்களாக’க் கருதியிருக்கிறார்கள். நூற்றாண்டுகளுக்கு பிறகு மார்ட்டின் லூதர், ரோமன் கத்தோலிக்கச் சபையில் சாத்தான் இருப்பதாகக் கருதியிருக்கிறார்.

Story image

எலைன் பேகல்ஸ், இன்றைய சூழலில் சாத்தான் எனும் உருவகம் எப்படிச் செயல்படுகிறது எனக் குறிப்பிடுகிறார் -

இன்றைய தேதியில்கூட, தன் சமயம் சாராத பிறரை சாத்தான் எனச் சொல்லி பிரசாரம் செய்யும் கிறிஸ்தவ வழக்கம் உள்ளது. இதை இஸ்லாமியர்கள், தங்கள் பிரசாரங்களில் சாத்தானின் கூட்டாளிகள் என எதிரிகளை வகைப்படுத்துகிறார்கள். உலகை, நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் இடையிலான போராட்டமாக இரட்டைப்படுத்தும் தன்மையில் சாத்தானின் உருவகப்படுத்தல் இன்றும் இருக்கிறது. இந்த உருவகப்படுத்துதலின் அதிதீவிர பொருள் முதல்வாத பார்வையை காரல் மார்க்ஸ் முன்வைத்தார். அது இன்று இயக்கமொழிந்துபோய்விட்டது என்றபோதிலும், அத்தகைய பார்வைகள், இன்றும் மதம் நீங்கிய மேற்கின் பார்வைகள் பலவற்றில் அடியோட்டமாக இருக்கின்றன.

இந்தியாவில் சாத்தான்

இந்தியாவில், சாத்தான் என மத எதிரிகளை அடையாளப்படுத்தும் தன்மை கிடையாது. இங்கும் மத மோதல்கள் இருந்திருக்கின்றன. வன்முறையான மத மோதல்கள்கூட இருந்திருக்கின்றன. சமண - சைவ - வைணவ - பௌத்த மோதல்கள். ஆனால், இவை எல்லாம் இணைந்து ஒட்டுமொத்தமாக ‘தீமையின் வடிவம்’ எனச் சொல்லி ஒழித்தழிக்கும் நிலை இந்தியாவில் ஏற்படவில்லை. புத்தர் சாத்தானாகவில்லை. மாறாக, விஷ்ணுவின் ஒரு அவதாரம் எனக் கருதப்பட்டார். மகாவீரர் அனைவராலும் வணங்கப்படுகிறார். சமணத்துறவி எனக் கருதப்படும் இளங்கோ அடிகளின் காவியம், அனைத்து மதங்களையும் ஒருங்கிணைக்கிறது. மிகத் தீவிர மத வைராக்கியத்துடன் இயங்கிய அக்பர், பின்னாட்களில் தீன் இலாஹி எனும் சமரசக் கோட்பாட்டையே முன்வைத்தார். இந்திய இஸ்லாமிய ஞானிகள் எவரும் இந்து மதத்தை சைத்தானின் மதம் எனப் பழிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். மாறாக, குணங்குடி மஸ்தான் முதல் தக்கலை பீரப்பா வரை, இந்து தத்துவ கோட்பாடுகளையும் ஆன்மிக வடிவங்களையும் பயன்படுத்தி ஸுஃபி மரபை பேசினார்கள். இந்திய மண்ணில், இறைவன் – சாத்தான் எனும் இருமைச் சட்டகம் வேர்பிடிக்க முடியவில்லை.

Story image

சாதியும் இனவாதமும் மனிதத்தை இழக்கவைக்கும் - பிகாரில் படுகொலை செய்யப்பட்ட பட்டியல் சமுதாயத்தினர் - அசாமில் போடோ தீவிரவாதிகளால் செய்யப்பட்ட படுகொலை

ஆனால், இப்போது நம் புராணங்களையும் பாரம்பரிய உறவுகளையும் இனவாதப்படுத்த ஆரம்பித்திருக்கிறோம். மக்கள் சமுதாயங்களை ஒன்றையொன்று அந்நியப்படுத்தி ‘ஆரியர்கள்’, ‘திராவிடர்கள்’, ‘இந்த இனமே ஏமாற்றும் இனம்’ என்பது போன்ற கோட்பாடுகள் வரும்போது, கூடவே அழித்தொழிக்கும் வெறுப்பு சாத்தியமாகும் ஒரு இடம் வந்துவிடுகிறது. இதன் விளைவாக, நம் சாதி மோதல்களும் இன ஒழிப்பு வெறுப்பு மனநிலைக்கு நிகராக மாற முடியும். பிகாரில், பட்டியல் சமுதாய மக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். குழந்தைகள் கொடூரமாகப் படுகொலை செய்யப்படுகின்றனர். நம் தமிழ்நாட்டிலேயே, கீழ்வெண்மணியில் குழந்தைகள் உட்பட பட்டியல் சமுதாயத்தினர் கொல்லப்பட்டனர். இவற்றை நியாயப்படுத்த மற்றொரு சமுதாயத்தை 'அந்நிய’ ’வந்தேறி’ ’சுரண்டும்’ சமுதாயமாகவோ, ‘நம்மில் கீழானவர்கள்’ என்றோ காட்டும் ஒரு சித்தாந்தம் போதுமானது. இன்று சமூக நீதி என்ற பெயரிலோ சாதி என்ற பெயரிலோ வந்தாலும், கொடும் வன்முறைக்குக் கொண்டுசெல்லும் சாத்தியத்தை இந்தியச் சமுதாயச் சூழலில் இது உருவாக்க இயலும். இதுவும் மதத்தின் 'பிறரை’ அழிக்கும் ஆதார வேகத்தையே பயன்படுத்தும்.

எனில், மதத்தின் இந்த இருள்நிழலை மானுடம் கடக்க என்ன செய்யலாம்? மதங்கள் அனைத்துக்குமான பொதுமை – எது மானுட பரிணாமத்தில் மதத்தினை முக்கியப்படுத்துகிறது என்பதைக் கண்டடைய வேண்டும்.

பொன் விதி

ஹிலெல், ஒரு யூத ஞானி. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரிடம் ஒரு புற சமயத்தான் வந்து கேட்டான், ‘நான் ஒற்றைக் காலில் நிற்கிற நேரத்தில், எனக்கு முழு யூத திருமறையை (தோரா) நீர் விளக்க வேண்டும். அப்படிச் செய்தால் நான் யூதனாவேன்'. ஒற்றைக் காலில் நிற்கிறேன் என்பது அங்குள்ள அக்கால பேச்சு வழக்கு. கண் இமைக்கும் நேரம் என்பதுபோல. வெகு சீக்கிரமாக, ரத்தினச் சுருக்கமாக ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்பது பொருள். இதற்கு முன், அவன் இதே கேள்வியை பல மதக் குருக்களிடம் கேட்டிருக்கிறான். ஆனால், அவர்கள் அவனை விரட்டிவிட்டார்கள் என்கிறது கதை.

Story image

மரம் வெட்டுபவரும் யூத ஞானியுமான ஹிலெல் கூறிய பதில், உலகச் சமய வரலாற்றில் முக்கியமானது. யூதம் என்னதான் ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட மதமாக இருந்தாலும், ‘ஆண்டவனுக்குக் கீழ்படி’ என்றோ அல்லது ‘ஆண்டவனை நம்பு’, ‘இறைவன் ஒருவனே’ என்றோ ஹிலெல் கூறவில்லை. மாறாக அவர் சொன்னார் - ‘நீ பிறர் உனக்கு எதை செய்யக்கூடாதென நினைக்கிறாயோ, அதை நீ பிறருக்குச் செய்யாதே’. இதுதான் முழு தோரா – பிறிதெல்லாம் வியாக்கியானங்கள்தான், பாஷ்யங்கள்தான். (this is the whole Torah; the rest is commentary). இறை-மையம் கொண்ட ஒரு ஓரிறை மதத்தின் அடிப்படையாக ஹிலெல் முன்வைத்தது, மானுட மையம் கொண்ட ஒரு விழுமியத்தை. இந்த விழுமியம், அனைத்து மானுட சமுதாயங்களிலும் உள்ளது. ஏதோ ஒருவிதத்தில் உள்ளது.

Story image

இந்தப் பொன் விதி, எல்லா மதங்களுக்கும் பொதுவானது. ஆப்பிரிக்க காங்கோ காடுகள் தொடங்கி இன்கா சாம்ராஜ்ஜியம் வரை, எங்கெல்லாம் மானுடம் ஆன்மிகத்தை அல்லது சமயப் பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கிறதோ அங்கெல்லாம் இந்தப் பொன் விதி இருக்கிறது. சமய எல்லைகளை கடந்து இந்த பொன்விதி இருக்கிறது.  சுவாமி விவேகானந்தர், இந்த விதியே மிகவும் அடிப்படையானதென்றும், அதன் ஆன்மிக அடிப்படையாக இருப்பது இருமையற்ற அனுபவநிலை என்றும் கருதுகிறார். பிறரைத் தானாக உணரும் தன்மையே இப்பொன் விதியின் அடிப்படை. அதை பிரம்மத்துவம் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். அதுவே சமூக ஜனநாயகத்தின் ஆன்மிக அடிப்படை என அவர் கூறுகிறார்.

ஹிலெல், சமயத்தின் ஆன்மா இந்த பொன் விதியே என்பதைக் கண்டடைந்தார். அவர் சொன்னது யூத திருமறையான தோராவுக்கு மட்டுமல்ல, அனைத்து சமய நூல்களுக்கும் பொருந்தும். மற்றவை அனைத்தும் – நம் வேறுபாடுகள் அனைத்தும் – வெளிப்பூச்சுகளே.  பொன் விதியும் சாத்தானிய உருவகமும் மானுட சமய பாரம்பரியத்தில் உள்ளன. இவற்றுள் சாத்தானே இல்லாத, ஏன் இறைவனே இல்லாத சமயங்கள் உள்ளன. ஆனால், பொன் விதி இல்லாத சமயம் எதுவுமே இல்லை. நம் கொலை வெறி, நம் சித்தாந்த வெறி இவை அனைத்துமே, ‘பிறரை’ தீமையின் ஒட்டுமொத்த வடிவமாக உருவமைப்பதிலிருந்து வருகிறது. அதிலிருந்து நாம் வெளிவந்து, ஒட்டுமொத்த மானுடத்தை நம்பிக்கையால் அல்ல, பொன் விதியால் தழுவ வேண்டும். அதற்கான அக விரிவை அளிப்பது மட்டுமே சமயம். அது நிகழ்ந்தால், பெஷாவர்களும் ஈஸ்டர் குண்டு வெடிப்புகளும் நிகழாத வருங்காலத்தை நாம் உருவாக்க முடியும். வேற்றுமையில் ஒற்றுமை எனும் பண்பாட்டுச் சாதனையை மானுடம் முழுமைக்கும் நாம் கொண்டுசெல்லவும் முடியும். 

மேலும் படிக்க -

Greg Mogenson, God is a Trauma: Vicarious Religion and Soul-making, Spring Publications, 1989.

Carl G Jung, Answer to Job, in ‘The Portable Jung’ (Edited by Joseph Campbell), Penguin, 1971.

Elaine Pagels, The Origin of Satan, Vintage books, 1996.

Yitzhak Buxbaum, The Life and Teachings of Hillel, Rowman & Littlefield, 1994.

A.Syrkin, The Golden Rule, Darshana International, Vol. XXV No. 1&2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.