4. திரைத்துறையில் ஒரு நல்முத்து! ராமகிருஷ்ணன் தேவர் முத்துராமன்

முத்துராமன் கதாநாயகனாக முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தாலும்
4. திரைத்துறையில் ஒரு நல்முத்து! ராமகிருஷ்ணன் தேவர் முத்துராமன்
Published on
Updated on
5 min read

முத்துராமன் முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்தாலும் ஏனோ அவர் மற்ற கதாநாயகர்களைப் போல புகழின் உச்சிக்கு செல்ல இயலவில்லை. குணசித்திர நடிகராக மட்டுமல்ல கதாநாயகன், நகைச்சுவை நடிகர் என்று பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் ஜொலித்தவர் அவர். ரசிகர்களால் நவரச திலகம் என்று கொண்டாடப்பட்ட முத்துராமன் 1960-- தொடங்கி 1970-ம் ஆண்டு இறுதிவரை கதாநாயகனாக நடித்தார். இயல்பான நடிப்பு, தெளிவான தமிழ் உச்சரிப்பு மற்றும் தனித்துவமான குரல் வளத்தால் இன்றளவும் பல ரசிகர்களை கொண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. முத்துராமன் ஜூலை மாதம் 4-ம் தேதி 1929-ம் ஆண்டு பிறந்தார். அவரது சொந்த ஊர் ஒரத்தநாடு. அவரது தந்தை ஒரு வழக்கறிஞர். முத்துராமன் நடித்த முதல் படத்தில் அவருக்கு கிடைத்த வேடமும் அதுதான். எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் அவர் திரை வாழ்க்கையில் ஏற்பட்டாலும் யாவற்றையும் ஈடுகொடுத்து நடுநிலையான மனதுடன் அத்தனையும் கடந்தவர் முத்துராமன்.

அன்றைய கதாநாயகர்களைப் போல ஆரம்பத்தில் நாடக நடிகராகத்தான் தன் திரைவழிப் பயணத்தை தொடங்கினார் முத்துராமன். மனோரமா, குலதெய்வம் ராஜகோபால் போன்றோருடன் ஒன்றாக மேடை நாடங்களில் நடித்து வந்தார். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகங்களிலும் அன்றைய நாட்களில் அவர் நடித்திருக்கிறார். வைரம் செட்டியார் நாடக குழுவில் முக்கிய நடிகராக விளங்கினார் முத்துராமன். மேடை நாடகத்தில் நடித்த காலத்தில் எஸ்.எஸ். ராஜேந்திரனுடன் இணைந்து, எஸ்.எஸ்.ஆர் நாடக மன்றத்தில் தொடர்ந்து பல நாடங்களில் நடித்தார். மணிமகுடம், முத்து மண்டபம் போன்ற நாடகங்கள் அந்நாட்களில் புகழ்பெற்றவை. மேலும் மகாகவி பாரதியாரின் கவிதைவரி நாடகத்தில் பங்கேற்று தனித்துவமான கவனம் பெற்றார். அதன் பின்னர் கே.எஸ்.பி.எஸ். கணபதி மூலமாகத் தமிழ் திரை உலகினுள் நுழைத்தார் முத்துராமன். அவ்வப்போது திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றினார். 

1956-ம் ஆண்டு வெளியான ரங்கூன் ராதா என்ற படத்தில் அவருக்கு வக்கீல் கதாபாத்திரம் வழங்கப்பட்டது. அதில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். அதன் பிறகு பிரதான பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். அரசிளங்குமரி என்ற திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த பின்னர்தான் வெகுஜன ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார் முத்துராமன். அதன் பின் பல திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களில் தோன்றி தனக்கென தனி முத்திரை பதிக்கத் தொடங்கினார் முத்துராமன், அவற்றுள் குறிப்பிடத் தகுந்த படங்கள் நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், சுமைதாங்கி, தெய்வம், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், காசேதான் கடவுளடா, எதிர் நீச்சல், ஊட்டி வரை உறவு, மயங்குகிறாள் ஒரு மாது, வாணி ராணி, மூன்று தெய்வங்கள் போன்றவை அதில் அடங்கும்.

குணசித்திர வேடத்தில் அறிமுகமாகி கதாநாயகனாக தொடர்ந்து சில படங்களில் இரண்டாம் நாயகனாகவும் மீண்டும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்தும் தன் இருப்பைத் திரையில் நிலை நிறுத்திக் கொண்டவர் முத்துராமன். அதிகளவில் துணைக் கதாபாத்திரங்களில் (supportive roles) நடித்த நடிகர் அவர். மேற்சொன்ன அனைத்துப் படங்களிலும் பிரதான பாத்திரத்தில் வந்தாலும் சரி சிறு வேடங்களில் தோன்றினாலும் சரி அவரது பங்களிப்பு மிகச் சிறப்பாகவே இருக்கும். ஆரம்பத்தில் மெதட் ஆக்டிங் முறையிலும் நாடக மேடை பாணியில் உச்ச ஸ்தாயி குரலில் பேசியும் விழிகளை உருட்டியும் நடித்து வந்தவர், ஒரு கட்டத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தத் தொடங்கினார். உடல்மொழியிலும், மிதமான நடிப்பாலும் தன்னை மெருகேற்றிக் கொண்டவர் அவர்.

முத்துராமன் நடிப்பில் மெருகேறி வருவதை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில், வாணி ராணி திரைபடத்தில் வாணிஸ்ரீயுடன் நகைச்சுவை நடிப்பில் அசத்தியிருப்பார். அன்றைய ரசிகர்கள் பலரும் வெகுவாக பாராட்டிய படமது. நகைச்சுவை கதாபாத்திரம் என்றால் முத்துராமனை கூப்பிடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காலக்கட்டத்தில் அவருக்கு அவ்வேடம் அத்தனை பொருத்தமாக இருக்கும். மூன்று தெய்வங்கள் என்ற படத்தில் திருடனாக நடித்திருப்பார் முத்துராமன். அதில் சிவாஜி மற்றும் நாகேஷுடன் சேர்ந்து நகைச்சுவைக் காட்சிகளில் மிளிர்ந்தார். இயக்குனர் இமயம் கே.பாலச்சந்ந்திரனின் எதிர் நீச்சல் படத்தில் பாலக்காட்டு மலையாளம் பேசியும் அசத்தி இருப்பார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் புற்றுநோயாளியாக பலவீனமான ஒருவராக காட்சியளிக்கும்படி வெகு இயல்பாக நடித்திருப்பார். அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர்தான் தன் மனைவியின் முன்னாள் காதலன் என்று தெரிந்த போது அதிர்ச்சியடைந்த போதும், தன் மறைவிக்குப் பிறகு மனைவி மறுமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய நல்மனதினராக நடித்தார். அவ்விஷயத்தைக் கேட்டு துடித்த தேவிகா, 'சொன்னது நீதானா, சொல் சொல் சொல் என்னுயிரே’ என்ற பாடலைப் பாடுவார். உருக்கமாகவும் மனதைப் பிழிந்தெடுக்கும் வகையிலும் அமைந்த அந்தப் பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் கூட கண்களில் நீர் துளிர்க்கும். அத்தகைய அற்புதமான நடிப்பாற்றலை தேவிகா, முத்துராமன் மற்றும் கல்யாண்குமார் ஆகிய மூவரும் வழங்கியிருப்பார்கள். இப்படி ஒவ்வொரு படத்திலும் அவருடைய வேடத்திற்கு தகுந்தாற்போல மிதமான நடிப்பால் அந்தக் கதாபாத்திரத்தை மக்கள் மனதில் பதியச் செய்து விடுவார்.

முத்துராமனின் நடிப்புக்கு இப்படி பல படங்களை உதாரணமாகச் சொன்னாலும் ஜெயலலிதாவுடன் அவர் நடித்த சூரியகாந்தி எனும் திரைப்படம் அவரது திரை வாழ்வில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். மனைவியின் முன்னேற்றத்தைப் பார்த்து பொறாமைப்படும் கணவராகவும், பின்னர் மனம் திருந்தி மனைவியை சக மனுஷியாக பார்க்கக் கற்றுக் கொண்ட பக்குவப்பட்ட மனிதராகவும் பக்குவமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பார். மன வேறுபாட்டால் மனைவியிடம் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் பேசாமல் இருப்பார். ஒரு கட்டத்தில் மனைவியுடன் சேர்ந்து சிறந்த தம்பதிகள் போட்டியில் கலந்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் போது வேண்டா வெறுப்பாகச் செல்வார். அந்தப் போட்டியில் மூன்று கட்ட சோதனைகள் நடக்கும். அதில் இரண்டாவது போட்டியாக ஒரு தட்டில் மலர்களை வைத்து மனைவியரை தேர்ந்தெடுக்கச் சொல்வார்கள். நான்கு ஜோடிகள் கலந்து கொண்ட அந்நிகழ்வில் ஒவ்வொரு பெண்ணும் ஒரு மலரைத் தேர்ந்தெடுக்க, ஜெயலலிதா சூரியகாந்தி மலரை எடுப்பார். நீதிபதி மற்றவர்கள் அனைவரும் வாசனையான மலர்களை தேர்ந்தெடுக்கும் போது நீங்கள் மட்டும் ஏன் வாசனையற்ற சூரியகாந்தி பூவை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்பார். அதற்கு அவர், சூரியன் போகும் இடமெல்லாம் சூரியகாந்தி திரும்பும். நல்ல மனைவியின் குணமும் அதுதான் கணவன் எந்த வழியோ அந்த வழிதான் நடப்பாள். இந்த நல்ல தத்துவத்தை விளக்குவதால் எனக்கு சூரியகாந்தி மிகவும் பிடிக்கும் என்று பதில் சொல்வார். அதற்கு முத்துராமன் தரும் முகபாவம் அதி அற்புதமாக இருக்கும். மனைவி சொன்ன கருத்தை ரசிக்கும் அதே நிலையில், அவள் மீதான கோபத்தையும் உள்ளடக்கி ஒரு பார்வை பார்ப்பார். அதன் பின் இருவரும் சிறந்த தம்பதியராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தப் படத்தில்தான் கவிஞர் கண்ணதாசன் எழுதி, நடித்த பாடலான ‘பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது.’ கருத்தாழம் மிக்க கதையும், அற்புதமான பாடல் வரிகளும் சூரியகாந்தி படத்தை வெற்றிப் படமாக்கியது என்றால் முத்துராமனின் காத்திரமான நடிப்பும் அதில் முக்கிய பங்கு வகித்தது எனலாம்.  போலவே சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷ் கே.ஆர்.விஜயாவை ஒரு தலையாக விரும்புவது தெரியாமல் நண்பனுக்கும் காதலிக்கும் இடையில் சிக்கியவராக நடித்திருப்பார். இயல்பிலேயே பெரிய விழிகளை உடையவர் அவர், முக பாவங்கள் மாறும்போது விழிகளை உருட்டி வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் முத்துராமன். காலத்தால் அழியாத கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்துள்ளதால் முத்துராமனின் பிம்பம் என்பது திரை ரசிகர்களால் என்றென்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. 

முத்துராமன் ஒரு கண்ணியமான இடைவெளியில்தான் கதாநாயகிகளுடன் நடிப்பார். அது அன்றைய ரசிகர்களிடையே அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கே.ஆர்.விஜயாவுடன்தான் அதிகளவு படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் முத்துராமன். தேவிகா, ஜெயலலிதா, காஞ்சனா, என முன்னணி கதாநாயகிகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அவர். அதிலும் காஞ்சனாவுடன் 19 படங்களில் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடக நடிகையான சுலோச்சனா என்பவரை காதல் திருமணம் புரிந்தார். 

திரைப்படங்களைத் தாண்டி அவரது கவனம் வேறு எதிலும் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் சாதிப் பற்றாளராக இருந்தார் என்பதும் உண்மை. அதை வெளிப்படையாகவே அவர் கூறியிருக்கிறார். பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை எனும் திரைப்படத்தில் முத்துராமனின் மகன் முரளியை நடிக்கக் கேட்க, சம்மதித்து நடிக்க அனுமதித்தார். முரளி கார்த்திக் என்ற திரைப்பெயருடன் மிகப் பெரிய வெற்றி பெற்றார். அவரது மகன் கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மூன்று தலைமுறையாக அவரது குடும்பம் திரைத் துறையில் ஆழமாக கால் பதித்தவர்கள் இந்த மூவரும் என்றால் மிகையல்ல. 

அக்டோபர் 16-ம் தேதி, 1981-ம் ஆண்டு ஆயிரம் முத்தங்கள் என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ஊட்டிக்குச் சென்றிருந்த சமயத்தில், காலை நடைபயிற்சிக்கு சென்றிருந்தார். திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட கீழே விழுந்துவிட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 52 வயதுதான். உடல் நலத்தில் அக்கறையுடன் இருந்து வந்த அவர் எப்போதும் ஆரோக்கியமாகவே இருந்தார். அதனால் அவருடைய மறைவு அவரது குடும்பத்தாருக்கும், திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

நட்பு, பழகும் தன்மை இவற்றைப் பொருத்தவரை ஒரு சகாப்தம் மறைந்து விட்டது என்றே சொல்ல வேண்டும் என்று எம்.ஜி.ஆர் தமது இரங்கலை முத்துராமனின் மறைவின் போது கூறினார். ஆரவாரமில்லாது அமைதியான நடிப்பை வழங்கிய ஒரு ஒப்பற்ற கலைஞனாக முத்துராமன் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பார். அவரது மகன் நடிகர் கார்த்திக் தந்தையின் பெயரை நடிப்பில் காப்பாற்றிவிட்டார். பேரன் கெளதம் கார்த்திக் தந்தையைப் போல தாத்தாவைப் போல திரையுலகில் ஜொலிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com