ஆசனம் 3 - பரிவட்டாசனம்
தீபாவளி சமயத்தில், ஜவுளிக்கடைப் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கக்கூடாது என்பது ரேணுகாவின் முடிவு.

வேண்டாம் சீசன் சேல்
தீபாவளி சமயத்தில், ஜவுளிக்கடைப் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கக்கூடாது என்பது ரேணுகாவின் முடிவு. ‘எருமைமாடு’களுக்கு இடையே சிக்கிக்கொண்டு யாரால் திண்டாட முடியும் என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டாள்.
அவளுக்கு மட்டுமே, மற்ற பெண்கள் எருமைமாடுகளாகத் தெரிந்தார்கள்.
எவளோ எப்படியோ முந்திக்கொண்டு, நல்ல நல்ல டிசைன்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய்விடுகிறாள் என்று விரல்களை நெட்டி முறித்தாள். இனிமேல், தீபாவளித் துணிகளை ஆடி மாதமே எடுத்து வைத்துவிடுவது என்று தீர்மானித்தாள்.
‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி ரேணு. தீபாவளி நெருக்கத்துல எடுத்தாத்தான் சுடச்சுடச் சாப்பிடற மாதிரி இருக்கும். சொன்னா கேட்கவா போறே நீ! போய்ட்டுவா என்று கூறி, ஏடிஎம் கார்டுகளை அவளது மடியில் அர்ச்சித்தான் ரகுபதி.
கடை திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே நுழைந்த ரேணுகாவை, ஆடி மாத ஏசிக் காற்று சுற்றி வளைத்துக்கொண்டு தள்ளாடச் செய்தது. நறுமணம் கலந்த காற்று அவளைச் சற்றே நிலை தடுமாற வைத்தது.
ஜில்லென்று போய், செலக்ஷன் கமிட்டியின் ஏகபோகத் தலைவியாக அமர்ந்தாள். மதியம் வரை டிசைன்களை அள்ளிப் போட்டுப்போட்டு மாய்ந்துபோனார்கள். அவளும், பின்னங்கழுத்தில் கை வைத்துப் பிடித்துவிட்டபடி உச்சுக்கொட்டிக்கொண்டே எழுந்து நின்றாள்.
புடைவைகளைக் கடைவிரித்தவர்கள் வாய்பிளந்து நின்றார்கள்.
இதுல ஒன்றுகூட மனசுக்கு ஒப்பலை. உங்களோட இன்னொரு பிராஞ்ச் இதே ரோட்டுல இருக்குல்ல, அங்க போய் பார்த்துட்டு வர்றேனே என்று கூறிவிட்டு வெளியேறினாள்.
பணியாளர்களையாவது வேலை வாங்கினாளே புண்ணியவதி என்று உரிமையாளர் ஓரக்கண்ணால் புன்னகைத்தார். ஒட்டி வந்து உரசாமல், உரசியபடி சமாதானம் பண்ண முயற்சித்தார்.
அவளா மசிவாள்!
அடுத்த கடையில் போய் அமர்ந்தாள். கால்களை எல்லாக் கோணங்களிலும் மாற்றி மாற்றி உட்கார்ந்து, யோகா பண்ணாத குறையாக ‘எழுந்து நின்ற’ ஆசனம் புரிந்தாள்.
பணியாளர்களுக்கு நீண்ட கொட்டாவியைப் பரிசாகத் தந்துவிட்டு, அந்தக் கடையிலிருந்தும் வெளியேறினாள்.
அசுத்தங்களின் மீது பட்டும் படாமலும் பறக்கும் ஈயைப்போல எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கிவிட்டாள்.
கடைசியாக ஒரு புதுக் கடைக்குள் போய் குடியேறினாள். இரவுக்குள் காலி செய்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதித்தார்கள். ஆனால், கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக அனுப்பி, கதவை மூடினார்கள்.
அநாதைப் பிணம்போல, ‘தேமே...’ என்று வீட்டுக்குள் நுழைந்த ரேணுகா, தீபாவளிக்கு புது டிசைனே வரலைங்க. புரட்டாசி பொறந்ததும் போனா சரியா இருக்கும் என்றபடி, ஷோபாவில் சாய்ந்தாள்.
தன் கையே தனக்கு உதவி என்பதுபோல, தானே சாதம் போட்டுச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் ரகுபதி.
‘வெறுங்கைய வீசிட்டு வர்றியே, எனக்கு ஒரு வேட்டியாவது எடுத்துட்டு வந்திருக்கலாம்ல?’
‘அதுக்கும் டிசைன் வேணாமா?’ என்றாள்.
அப்படியே ஓடிவந்து அவள் மீது ஏறி நின்று மிதிமிதி என்று மிதிக்கலாம் போலிருந்தது அவனுக்கு.
‘பாரு ரேணுகா. சீசன்ல போனா டிசைன்ஸ் நிறைய இருக்கும். ஆனா அதை எல்லாரும் அள்ளிட்டுப் போயிடறாங்கன்னு சொல்றே. அன்-சீசன்ல போனா நிதானமா எடுக்கலாம். ஆனா புது டிசைனே இருக்காது, வராதுங்கறே. எல்லாம் மனசுதான் ரேணுகா. பெருசா கற்பனை பண்ணிக்கிட்டுப்போனா, ஜவுளிக்கடை மட்டுமில்ல, எங்குமே எதுவுமே அமையாது. எதிர்பார்ப்புங்கறது ஒருவகைக் கற்பனை. அதை யாராலும் பூர்த்திசெய்ய முடியாது. நல்ல குவாலிட்டியா இருக்கணும். போதுமான டிஸைன் இருந்தாப் போதும்னு நினைக்கணும்’ என்று சொல்லிவிட்டு, புறங்கையை நக்கியபடியே கழுவப் போனான் ரகுபதி.

ஆசனம் 3 – பரிவட்டாசனம்
செய்முறை
கால்கள் இரண்டையும் விரித்து நீட்டியபடி அமரவும். பிறகு கால்களை மடக்கி ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பத்மாசனத்தில் அமரவும்.
பத்மாசனத்தில் அமர்ந்தவாறு இரண்டு கைகளையும் அகலமாக விரித்து மேலே உயர்த்திக்கொண்டே சென்று உள்ளங்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கூப்பியபடி சேர்த்து வைத்துக்கொள்ளவும்.
ஆழ்ந்த வயிற்றுச் சுவாசம் எடுக்கவும். சுமார் பத்து சுவாசங்கள் போதுமானது.
பிறகு, சுவாசத்தை வெளியிட்டவாறு கைகள் இரண்டையும் சம நிலையில் மெதுவாக கீழிறக்கிக்கொண்டே வந்து தளரவிடவும்.
சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் கைகளை மேலே உயர்த்தி முன்பு போலவே செய்யவும். பிறகு, மெதுவாகத் தளர்த்திக்கொண்டு வரவும். இப்படி சுமார் ஐந்து தடவை செய்யலாம்.
பிறகு, கால்களை மாற்றி அமைத்து, மீண்டும் அதே எண்ணிக்கையில் சுவாசிக்கவும்.

பலன்கள்

இந்த ஆசனத்தின்போது, சுவாசமானது நடுநாடியாகி சுழுமுனை நாடி வழியாக நடைபெறுகிறது. அதன் வழியில்தான், மூலதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை ஆகிய சக்கரங்கள் தூண்டிவிடப்படுகிறது. அதனால், உடல் மற்றும் உள்ளத்தில் பிரகாசம் ஏற்படும். வாழ்க்கையில் உற்சாகமும் ஈடுபாடும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

மாடல்: பிரியா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...