ஆசனம் 4 - பாதஹஸ்தாசனம்
பாதம் என்றால் கால். ஹஸ்தம் என்றால் கை. கைகளைக் கால்களுக்கு அருகாமையில் கொண்டு சென்று செய்யக்கூடிய ஆசனம் என்பதால் பாதஹஸ்தாசனம் என்று ஆயிற்று.

எங்க வீட்டு மாமியார்
கரூருக்கு மணமாகிப்போனாள் ராதே.
என் மாமியா ஒரு மனுஷியே இல்லை. எவளுக்குமே இப்படிப்பட்ட மாமியா வாச்சிருக்க முடியாது என்று தாய் வீட்டுக்கு வரும்போதெல்லாம் பக்கத்து வீட்டுப் பெண்மணிகளிடம் புலம்பிச் சலித்தாள்.
‘என்னைப்போல கஷ்டப்பட்டவங்க யாருமே இல்லேன்னுதான் எல்லாருமே சொல்லுவாங்க ராது. எனக்கு வாய்ச்ச மாமியாரை விடவா, போடீ போ’ என்று சிலுப்பிக்கொண்டுபோனாள் நந்தினி.
தன் மாமியார் மரகதம் படுமோசம் என்று சொன்னால், எல்லோருமே காதில் வாங்கிக்கொள்ள மறுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டாள் ராதே.
சும்மா சொல்லக்கூடாது, ராதேவுக்கு வாய்த்தது ஒரு ‘பெக்கூலியர்’ மாமியார்தான்.
அவளுக்கு மருமகள் மீது கோபம் வரும்போதெல்லாம், பெற்ற மகன் என்றும் பாராமல், அவள் முன்னிலையிலேயே தன் மகனைப் பற்றிப் படுமோசமாகப் பேசுவாள்.
தன் கணவனைப் பெற்ற தாயே பொறிந்து தள்ளுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்தாள் ராது. மரகதமோ, பொறுமையை சோதித்துக்கொண்டே இருந்தாள்.
‘சாது மிரண்டால் மட்டும் காடு கொள்ளாது. ராதே மிரண்டாலும் வீடு கொள்ளாது’.
ஒருநாள், தனது கூந்தலை முகத்துக்கு முன்னால் போட்டுக் குனிந்துகொண்டு, பேன் சீப்பால் வழித்தபடியே புலம்பிக்கொண்டிருந்தாள் மரகதம்.
மருமகள் கவனம் புத்தகத்தின் மீது போய்விடக்கூடாது என்பதால், தனது ‘வால்யூமை’ சற்றே கூட்டிக்கொண்டாள் மரகதம்.
ராதேவின் காதுபட, மகனைப் பற்றிப் படுகேவலமாகப் பேசிக்கொண்டிருந்தாள் மரகதம்.
‘வெள்ளிக்கிழமை வீட்டுக்குள்ள இவ காலடி வச்சா. தூக்கித் தின்னிருந்தாலும் பரவாயில்ல. சனிக்கிழமையோட என் புள்ளையத் தள்ளி வச்சிட்டா பாவி முண்டை. அவனைப் பத்து மாசம் சுமந்திருக்கக்கூடாதுடீ. போயும் போயும் இவளுக்காகவா சொமந்தேன். பத்தி எரியுதுடீ வயிறு. இவதான் வாக்கப்பட வருவான்னு தெரிஞ்சிருந்தா, அப்பவே கள்ளிப் பாலைக் குடுத்திருப்பேன்டீ. இப்பவும்கூட இருக்கக்கூடாதுடீ அவன். பத்துமாசம் சொமந்து பெத்த தாயை, நேத்து வந்தவளுக்காக ஒரே நாள்ல தூக்கி எறிஞ்சானே. பாவி, நாசமாப் போக, நல்லா இருப்பானா? அவன் சாகணும்டீ முதல்ல. வெந்தும் வேகாத பொணம்போல இவ காலடில போயி கஞ்சி குடிக்க வெச்சிட்டானே. நல்லா இருப்பானா. ச்சே, நாலு நாலா இந்தப் பேனு நடு வகுட்டுலயே ஓடிட்டுருக்கு. சீப்புல வசமாச் சிக்கிக்கிடுச்சு. வாடீ வா..
சடக்குன்னு ரெத்தம் தெரிக்கற மாதிரி நகத்துல வைச்சி குத்தறது காதுல விழுதா, ‘அந்த மாதிரி அவனும் வண்டி காருல அடிபட்டுச் சாகணும்டீ. அப்பத்தான் என் மனசு ஆறும். மகனா இருந்தா என்ன, எவனா இருந்தா என்ன. அவனைக் கல்யாணம் பண்ணினவ தாலிய அறுக்கணும்டீ. அதைத்தான் நான் சாமிகிட்ட வேண்டிட்டு இருக்கேன்’ என்று மரகதம் புலம்பி முடிக்கவில்லை.
வார இதழை வாசித்துக்கொண்டிருந்த ராதே, அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடியாமல் கண்ணகிபோல எழுந்து வந்தாள்.
‘அன்னியன்’போல கூந்தலுக்குள் கூனிக்கொண்டிருந்த மாமியார் மரகத்தின் கூந்தலை இடது கையால் பற்றி ஆக்ரோஷத்துடன் மேலே தூக்கினாள்.
நிமிர்ந்து பார்த்த மரகதம், அங்காள பரமேஸ்வரிதான் கிளம்பி வந்துவிட்டாளோ என்று ஆடிப்போய்விட்டாள். மரகதத்தின் இரண்டு கன்னங்களிலும் ‘பளார் பளார்’ என்று மாறி மாறி அறை விட்டாள். கை விரல்களை மூடி, வாய் மீது குத்துவிட்டாள். நீ பெத்தவங்கறதுக்காக என்னன்னாலும் பேசுவியா. நான் வாக்கப்பட்டவடீ. நானும் பார்த்துட்டே இருக்கேன், ரொம்ப ஓவராப் போறியே. அவரு சாகணும்ங்கற வார்த்தை மட்டும் இன்னொரு தடவை உன் வாயிலருந்து வரக்கூடாது! வந்துச்சி… கொன்னுடுவேன் கொன்னு!”
திரும்பி வந்து இதழைக் கையில் எடுத்துக்கொண்டு மீதிக் கதையைத் தொடர்ந்தாள்.
‘ஐயோ மருமக என்னை அடிச்சிட்டா! கேட்கறதுக்கு நாதி இல்லையா? கலி முத்திப்போச்சே கடவுளே. மருமக என்னை அடிச்சிட்டாளே. இந்தக் கொடுமையக் கேட்கறதுக்கு யாருமில்லையா’ என்று ஊரறியக் கூப்பாடு போட்டாள். தெருவுக்கு இறங்கி ஓடினாள்.
வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தாள்.
மாமியாரை அடித்தது கிரிமினில் குற்றம். தனக்கு எங்கும் நீதி கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்ட ராதே, கணவனிடமே காரணத்தைச் சொல்லிச் சரணடைந்தாள். தன் தவறை உணர்ந்தாள்.
அன்றிலிருந்து மிகவும் பொறுமையாக இருக்கத் தீர்மானித்தாள்.
ஆனால் மரகதமோ, கோழி கூவும்போதே புலம்ப ஆரம்பித்துவிடுவாள். ராதேவின் அம்மா, அப்பா, அண்ணன், அக்காள், தங்கை, தம்பிகளைப் பற்றி எல்லாம் படுகேவலமாகப் பேச ஆரம்பித்தாள். இல்லாததும் பொல்லாததும் பேசினாள். வேறு ஒரு ராதேவாக இருந்திருந்தால், மரகதத்தை ரவா ‘லட்டு’ பிடித்திருப்பாள்!
என்ன பேசினாலும் காது கேளாதவள்போல இருந்தாள்.
பேன் பார்க்கும் படலத்தின்போதுதான் மரகதத்தின் வார்த்தைகள் உச்சத்துக்குச் செல்லும்.
அன்றும் அதே படலத்தின்போது, ராதேவின் காதுபட, பேசாத பேச்சை எல்லாம் பேச ஆரம்பித்தாள் மரகதம். ராதே பொறுமை இழந்தாள். பொங்கி எழுந்தவளாக மரகதத்தை நோக்கி நடந்தாள்.
ஐயோ அடிக்க வாரா, அடிக்க வாரா என்று கூப்பாடு போட்டாள் மரகதம்.
அருகில் வந்ததும் மரகத்தின் கால்களைத் தொட்டு வணங்கினாள் ராதே. ‘என்னை மன்னிச்சுடுங்க அத்தை. அன்னிக்கு உங்களை அவசரப்பட்டு கைநீட்டிட்டேன்’ என்று கும்பிட்டு நின்றாள். மரகதம் பேச்சு மூச்சற்று மரக்கட்டைபோல நின்றாள்.
மறுநாள் பிற்பகல்,
உறக்கத்தில் இருந்த ராதேவின் தாடையைப் பிடித்து உயர்த்தி நெற்றியில் உதடுகளைப் பதித்தாள் மரகதம். கண் விழித்த ராதே, குழப்பத்தோடு கூர்ந்து பார்த்தாள். கண்களைக் கசக்கியபோது, ‘நீயும் என்னை மன்னிச்சுடும்மா. தப்பெல்லாம் என் மேலதான். பொறுமைய உன்கிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன். என் புள்ளைய நான் பேசினதெல்லாம் தப்பு. நான் பெத்தவ. நீ கட்டிக்கிட்டவ. இருக்கற வரை நம்ம உறவு எந்த வகையிலும் கெட்டுப்போகாம பார்த்துக்கணும். பொறுமைதான் பெண்களுக்குப் பெருமை. அதை உன்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டேன் ராது’ என்று கூறித் தலையைக் கோதினாள்.
பாதம் என்றால் கால். ஹஸ்தம் என்றால் கை. கைகளைக் கால்களுக்கு அருகாமையில் கொண்டு சென்று செய்யக்கூடிய ஆசனம் என்பதால் பாதஹஸ்தாசனம் என்று ஆயிற்று.

செய்முறை
இரண்டு கைகளையும் தளரவிட்டு நிற்கவும்.
சுவாசத்தை உள்ளிழுத்தபடியே இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக்கொண்டே வரவும். அப்படியே பின்பக்கமாகச் சாய்ந்து வளைந்து நிற்கவும். அப்போது மார்புப் பகுதி ஆகாயத்தை நோக்குவதுபோல இருக்க வேண்டும்.
பின்னர் சுவாசத்தை வெளியிட்டவாறு குனிந்துகொண்டே வரவும். இரண்டு கைகளாலும் இரண்டு கால்களைத் தொட முயலவும். உச்சந்தலை பூமியைப் பார்ப்பது போல இருக்க வேண்டும். கை விரல்களால் கால் கட்டை விரல்களைப் பிடித்தால் நல்லது. முழங்கால்களில் வளைவு இருக்கக்கூடாது. இயன்றவரை குனிந்து நின்று, நீண்ட சுவாசங்கள் எடுக்கவும்.
பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தபடியே, மீண்டும் கைகளை உயர்த்திக்கொண்டே மேலே தூக்கவும். அப்படியே பின்பக்கமாகச் சாய்ந்து வளைந்து நிற்கவும். மார்புப் பகுதி ஆகாயத்தை நோக்குவதுபோல இருக்க வேண்டும்.
பின்னர் சுவாசத்தை வெளியிட்டவாறே நேராக நின்று கைகளைத் தளரவிடவும்.
மீண்டும் மீண்டும் இவ்வாசனத்தைச் செய்யவும்.

பலன்கள்

முதுகுத் தண்டு வடம் முன்னும் பின்னுமாக வளைக்கப்படுவதால், வட்ட எலும்புகளுக்கு (டிஸ்க்குகள்) நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கிறது. தலைக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால், மூளை அணுக்களுக்கு நிறைய பிராண சக்தி கிடைக்கிறது.

இதயம், நுரையீரல்கள் கவிழ்ந்த நிலையில் ரத்த ஓட்டத்தைப் பெறுவதால், அவை புத்துணர்ச்சியுடன் செயலாற்றுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...